தமிழ் சினிமாவில், ஒரு நடிகர் எல்லா விஷயங்களிலும் தன் திறமையை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு காலத்தில், போட்டோ ஸ்டுடியோவில் கருப்பு – வெள்ளை போட்டோ எடுக்கவே, போட்டோகிராபர் கடுமையாக சிரமப்பட வேண்டி இருக்கும். தலையை சாய்த்து, நேராக்கி, வளைத்து ஒரு பாஸ்போட் சைஸ் போட்டோ எடுப்பதற்குள், சிலர் பாடாய் படுத்தி விடுவர்.
ஆனால், இரண்டரை மணி நேர சினிமாவில் பல கேமராக்களுக்கு மத்தியில், பேசி, சிரித்து, அழுது, நடனமாடி என, பலவிதங்களிலும் ஒரு ஹீரோ, தன்னை நல்ல நடிகனாக நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது. சில நடிகர்களுக்கு நடிக்க வந்தாலும், அழுகை காட்சியில் நடிக்க தெரியாது. சோக காட்சியில் முகபாவம் காட்டத் தெரியாது. காதல் காட்சியில், அந்த உணர்வுகளை கண்களில் காட்டுவதில் தடுமாறுவர். கேமரா முன், கோபப்படவும் தெரிந்திருப்பது முக்கியம். சிலருக்கு நடனமே ஆட வராது.
அதுபோல், இந்த பிரபல ஹீரோவுக்கு, நடனம் வராதாம். இதை அவரே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அறிமுகப்படுத்திய பாய்ஸ் பட ஹீரோ சித்தார்த் தான். தற்போது அவரது நடிப்பில் சித்தா என்ற புதிய படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் முழுமுழுக்க, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடுக்கப்பட்டிருக்கிறது.
சித்தா படம் ரிலீஸ் ஆவதையொட்டி, ஒரு நேர்காணலில் நடிகர் சித்தார்த் கூறியதாவது, எகிறி குதித்தேன் வானம் இடித்தது என எப்படி முதல் படமான பாய்ஸில் படத்தில் பாடினேனோ, அதில் இருந்து,நடனத்தில் எகிறிக் குதித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஏனெனில், நடனமாடுவதற்கு நிறைய மெனக்கெடுகிறேன். வாரத விஷயங்களுக்கு தான் மெனக்கெட வேண்டும். என்னுடைய சில படங்களில், என் நடன அசைவுகள் நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு டான்ஸ் மாஸ்டர்கள்தான் காரணம். நிச்சயமாக நான் அல்ல. அதனால் ஒரு கட்டத்தில், பாடல்கள் இல்லாத படங்களாக, தேர்வு செய்து நடித்துக்கொண்டு இருந்தேன்.
டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்திடம், என, குழந்தை மாதிரி அழுதிருக்கிறேன். எனது சில பாடல்கள் ஹிட் ஆக, டான்ஸ் மாஸ்டர்கள் ராஜூ சுந்தரம், கல்யாண் மாஸ்டர் போன்றவர்கள் தான் காரணம்.
இப்போது, களத்தில் சந்திப்போம் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், அடுத்த படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். இது ஒரு காதல் படம். அருமையான கதை. இதில் மூன்று பாடல்களில் நடனம் ஆட வேண்டிய சூழலில் இருக்கிறேன், தினேஷ் மாஸ்டர் தான் டான்ஸ் மாஸ்டர். எனக்கு நெருங்கிய நண்பர் தான், முதல் நாள் ஷூட்டிங் அன்றே, கையை காலாக நினைச்சு பிடித்து கெஞ்சிடுவேன். எப்படியாவது என்னை கரை சேர்த்திடுங்க. என்று கேட்டுடுவேன். பாய்ஸ் படத்தின் போது, டான்ஸ் வரமாட்டேங்குது என நான் குழந்தை மாதிரி அழுதிருக்கேன், அதை ராஜூ சுந்தரமும் பார்த்து, ச்சீ அழாம வா என கூப்பிடுவார், என வெளிப்படையாக கூறி இருக்கிறார் சித்தார்த்.





