சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது என்று பல காலம் கூறுவதுண்டு. அதனை உறுதிப்படுத்தும்வகையில்தான் நடிகைகளும் பல பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர். அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை ஒரு பக்கம் என்றால், தங்கும் இடத்தில் உருவாகும் பிரச்னை மறுபக்கம் என கதாநாயகிகளின் கஷ்டம் காலங்காலமாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
முக்கியமாக அவர்கள் தங்கும் இடத்தில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்கள் ஏகப்பட்ட சங்கடங்களை சந்தித்த வரலாறும் உண்டு. தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாக்கூட அந்த மாதிரி ஒரு பிரச்னையில் பல வருடங்களுக்கு முன்பு சிக்கினார் என்பது பலருக்கும் நினைவு இருக்கும். ஆனால் அந்தப் பிரச்னையை கண்டு அவர் எந்த சலனமும் படாமல் தைரியமாக எதிர்கொண்டு இன்னமும் ஃபீல்டில் நிற்கிறார். ஆனால் அதே தைரியம் பலருக்கும் வருவதில்லை.
இந்நிலையில் நடிகை க்ரித்தி கர்பந்தாவுக்கும் ரகசிய கேமரா வைத்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் அவர் இதுகுறித்து அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “கன்னட படம் ஒன்றில் நடிப்பதற்காக பெங்களூரு ஹோட்டல் ஒன்றில் தங்க ரூம் புக் செய்தோம். ஒரு ஹோட்டலில் தங்கினால் நானும் எனது உதவியாளரும் ரூமில் ஏதும் ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை சல்லடை போட்டு தேடுவோம்.
பாத்ரூம், படுக்கை அறை என ஒரு இடம் விடமாட்டோம். அப்படித்தான் அன்றும் நாங்கள் சோதனை செய்தோம். அப்போது டெட் டாப் பாக்ஸ் கீழே ஒரு ரகசிய கேமரா இருந்தது. அதனை ஒரு ரூம் பாய் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் உடனடியாக அந்த ஹோட்டலை காலி செய்துவிட்டு வேறு ஹோட்டலில் ரூம் புக் செய்து தங்கினோம். நல்லவேளை அந்தரங்கமாக எந்த வீடியோவும் வெளியாகவில்லை” என்றார். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
க்ரித்தி கர்பந்தா தமிழில் ஜிவி பிரகாஷுடன் புரூஸ் லீ படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான போனி என்ற படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் சிரு என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் க்ரித்தியின் நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. இதனையடுத்து அவருக்கு கன்னட திரையுலகில் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையத்தொடங்கியிருக்கின்றன. தற்போது அவர் அங்கு வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். கன்னடம் மட்டுமின்றி ஹிந்தியிலும் அவர் சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





