நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு, ரஜினியை பின்னுக்கு தள்ளிவிடும் ஒரு டாப் நடிகராக வளர்ந்து நிற்கிறார். 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கே, இது பெரிய சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன், என்று லால் சலாம் விழாவில் பேசினார்.
அதேபோல் நடிகர் விஜயும், சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர்தான், நான் எப்போதும் தளபதிதான் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார். என்றாலும் இதற்கிடையே காக்கா – கழுகு கதை எல்லாம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அலப்பரையை ஏற்படுத்தி விட்டது. இப்போது இன்னும் ஒரு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு என்ற நிலைக்கும் விஜய் வந்து விட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், தொடர்ந்து பல விஷயங்கள் சார்ந்த அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இவர் அரசியல் நாயகனா, அறிக்கை நாயகனா என்ற கேள்வி எழுந்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது, உடனடியாக கள்ளக்குறிச்சி சென்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மீண்டும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய விஜய், முதல் நாளில் தமிழகத்துக்கு இப்போதைய முக்கிய தேவை, நல்ல தலைவர்கள் தான் என்று பேசி அசத்தினார். 2வது நாள் நிகழ்ச்சியில், நீட் விலக்கு குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் நீட் விலக்கு கோரிய தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்ற விஜய், மோடி தலைமையிலான பாஜக அரசை, ஒன்றிய அரசு என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விஜய் குறித்து ஒரு விமர்சனம் புதிதாக எழுந்துள்ளது. நடிகர் விஜயகாந்தை போலவே, நடிகர் விஜய்க்கும் தமிழக மக்கள் மத்தியில் அரசியலில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தேமுதிக கட்சிக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்க காரணம், கட்சி தலைவரான விஜயகாந்த் தான். இப்போது அந்த கட்சிக்கு அந்த செல்வாக்கு இல்லை.
அதற்கு காரணம், விஜயகாந்த் நல்ல தலைவர். தலைமைப்பண்பு மிக்கவர். எதையும் சிறப்பாக நிர்வகிக்கும் திறமை படைத்தவர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்து அவர் தீர்த்து வைத்த பிரச்னைகள் ஏராளம். நடிகர் சங்க கடனுக்காக, வெளிநாடுகளில் நட்சத்திர கலை இரவுகளை நடத்திக் காட்டியவர். அந்த லீடர்ஷிப் நடிகர் விஜயிடம் இருக்கிறதா, அவர் ஒருமுறையானது சினிமா அமைப்பு சார்ந்த நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் தலைவராக இருந்திருக்கிறாரா, என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுபோன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் 2026 சட்டசைப தேர்தலில் தளபதி பதில் சொல்வார் என்கின்றனர் அவரது தவெக கட்சியினர்.





