தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அவரது இயக்கத்தில் 2வது உருவான படம் டிராகன். கோமாளி படத்தில் இயக்குனராகவும், லவ் டுடே படத்தில் நாயகனாகவும் நடித்து தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை பெற்றவர் பிரதீப் ரங்கநாதன்.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 21ம் தேதி ரிலீஸான நிலையில் 10 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்து பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் இருவருமே ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லவ் டுடே படத்தில் தனது இயக்கத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதன், மற்றொரு இயக்குனர் இயக்கத்தில் நடித்தால் இவ்வளவு பெரிய வெற்றியை பெறுவாரா என லவ்டுடே படம் ரூ. 100 கோடி வசூலித்த காலகட்டத்தில் சிலர் விமர்சித்தனர். அதற்கு சரியான பதிலடி தரும் விதமாக டிராகன் படத்திலும் நடிப்பில் வேற லெவல் சம்பவம் செய்திருக்கிறார் பிரதீப் என்பதும் கவனிக்கத்தக்கது.
டிராகன் படத்தை பொருத்த வரை படத்தின் ஹீரோ இயக்குனர் மட்டுமின்றி படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஹயாடு லோகர் ஜார்ஜ் மரியன் இந்துமதி கேஎஸ் ரவிக்குமார் விஜே சித்து கௌதம் மேனன் மிஷ்கின் என அனைவருமே ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். காட்சிக்கு காட்சி இந்த படம் அந்தளவுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டிராகன் படத்தின் வெற்றி விழா, சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நாயகன் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது இந்த விழாவில் டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தெலுங்கில் முன்னணி மாஸ் ஹீரோவாக உள்ள மகேஷ் பாபுவுக்கு ஒரு கோரிக்கை வைத்து பேசினார்.
அப்போது அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது, என்னுடைய முதல் படம் ஓ மை கடவுளே படம் வெளியான போது, அந்த படத்தை பார்த்த நடிகர் மகேஷ் பாபு பாராட்டி ஒரு டிவீட் போட்டார். அதைப் பார்த்த தெலுங்கு ரசிகர்கள், படத்தை பார்த்துவிட்டு கொண்டாடினார்கள். அதே போல் டிராகன் படத்தையும் அவர் பார்க்க வேண்டும். அவருக்கு நிச்சயமாக இந்த படமும் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன், என்று கோரிக்கை விடுத்து பேசியிருக்கிறார்.





