நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் அடுத்த ஆண்டில் தனது 50வது பொன்விழா ஆண்டை கொண்டாட இருக்கிறார். கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அவர், அடுத்த ஆண்டில் தனது 50 ஆண்டை நிறைவு செய்கிறார். இதையொட்டி பொன்விழா ஆண்டாக வரும் 2025ம் ஆண்டு அவருக்கு அமைகிறது. இந்த ஆண்டில் கூலி, ஜெயிலர் 2 படங்களை ரசிகர்களுக்கு ஸ்பெஷல் டிரீட் ஆக தர அவர் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்தாண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மீண்டும் ஒரு பாட்ஷா போல, இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தங்கப்பதக்கம் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் என பலரும் கிண்டலடித்த போதும், இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து இப்போது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள படம் வேட்டையன். வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த படம், வரும் ஏப்ரல் 14க்கு தமிழ் புத்தாண்டு ரிலீஸ்க்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி இரவு ரஜினிகாந்த் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ரத்தநாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சையின்றி அங்கு ஸ்டண்ட் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 நாட்களுக்கு பின், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பியுள்ளார். இப்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
எனினும் அவர் மருத்துவமனையில் இருந்த போது அவர் உடல் நலம் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக தனக்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு டிவிட்டர் வாயிலாக தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்படத் துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான மக்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியிருக்கிறார். தன் நலத்தை விரும்புவோருக்கு உடனடியாக நன்றி தெரிவித்த ரஜினியின் இந்த குணம்தான் அவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாட வைக்கிறது என்பதுதான் மாபெரும் உண்மை.





