கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. உலகம் முழுவதும் பிளாக் பஸ்டர் மூவியாக ரசிகர்கள் கொண்டாடி இந்த படத்தின் 2ம் பாகம், கடந்த 5ம் தேதி உலகம் முழுவதும் 12 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 800 திரைகளில் ரிலீஸானது.
புஷ்பா 2 படத்தின் நீளம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்று கூறப்பட்டாலும் படத்தில் அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகளால், அவ்வளவு நேரம் படம் போனதே தெரியவில்லை என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரம் 45 நிமிடங்களில் படங்கள் வரும் நிலையில், இப்படி 3.5 மணி நேரம் படம் பார்ப்பது, ஒரு டிக்கெட் வாங்கி 2 படங்கள் பார்த்த திருப்தியை தருகிறது என்றும் சில ரசிகர்கள் கூறுகின்றனர்.
படம் ரிலீஸான முதல் நாள் முதல் காட்சியிலேயே பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் துவங்கிய நிலையில் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 275 கோடி ரூபாய் வரை புஷ்பா 2 படம் வசூல் சாதனை படைத்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக இந்தியில் 67.5 கோடி ரூபாய் முதல் நாளில் வசூலித்து ஜவான், கேஜிஎப் படங்களை பின்னுக்கு தள்ளியது.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 500 கோடி ரூபாய் எனவும், இதில் நடிகர் அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ. 300 கோடி, இயக்குனர் சுகுமாரன் சம்பளம் ரூ. 100 கோடி, ராஷ்மிகா மந்தனா சம்பளம் ரூ. 10 கோடி, பகத் பாசில் சம்பளம் ரூ. 8 கோடி, ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீ லீலா சம்பளம் ரூ. 2 கோடி என்றும் கூறப்படுகிறது.
புஷ்பா 2 படம் வெளியான 3 நாட்களில் இதுவரை ரூ. 500 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் இவ்வளவு பெரிய வசூல் சாதனையை புரிந்துள்ள புஷ்பா2 இன்னும் ஓரிரு வாரங்களில் 2000 கோடி ரூபாய் வசூலை கடந்துவிடும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
உலகளவில் ரூ. 500 கோடி வசூல் சாதனை புரிந்துள்ள புஷ்பா 2 படம், இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 270 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் புஷ்பா 2 வெளியான முதல் நாளில் ரூ. 8.5 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் 3 நாட்களில் மொத்த வசூல் ரூ. 30 கோடியை கடந்துள்ளது. தெலுங்கு டப்பிங் படத்துக்கு தமிழ்நாட்டில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று வார விடுமுறை தினம் என்பதால் புஷ்பா 2 வசூல் கணிசமாக இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.





