தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பையனூரில் பாடல் காட்சியுடன் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜூ, நரேன், பாபி தியோல் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வருகிற 27ம் தேதி நடத்த உள்ளார். நேற்று மாநாட்டிற்கான பந்தல்கால் நடப்பட்டு மாநாடு பணிகள் தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் இந்த மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது.
மாநாட்டில் தற்போது இடத்தை சமன்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளது. 50 அடி உயரம், 800 அடி அகலத்தில் செயின் ஜார்ஜ் கோட்டை போன்ற முகப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள கட்சி தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது, வி சாலை என்னும் வெற்றிச்சாலையில் சந்திப்போம். மாநாடு தொடங்கி முடியும் வரை ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா என சிலர் கேள்விக்கணைகளை வீசுகிறார்கள். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும்போது தான் அவர்களுக்கு என்னவென்று தெரியும்.
மற்ற கட்சிகளைப் போல சாதாரண இயக்கம் அல்ல, ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நிரூபிப்போம். வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகிற கட்சி என்பதை இனிமேல் புரிந்து கொள்வர். மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக களமாடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகிறோம்.
தவெகவின் முதல் மாநில மாநாடு என்பது நம் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும், பொறுப்பான மக்கள் இயக்கமாக இருந்த நாம், அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இயக்கமாக மாறிவிட்டோம். மக்களுக்கு இன்னமும் முழுமை பெறாத அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டே இருக்கும் லட்சிய கனவு இதுதான் என்று, நடிகர் விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.





