மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் மழைவெள்ளத்தில் மூழ்கியது. கடந்த ஒரு வாரமாக மழைவெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் அவதிப்படுகின்றனர். வீடுகளை சுற்றி, குளம்போல மழைவெள்ளம் தேங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் தரப்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு முகாம்களில், மீட்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர சென்னையில் வெள்ளப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களும் மீட்கப்பட்டு, பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைவெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர்கான், விஷ்ணு விஷால் நடிகை நமீதா போன்றவர்களும் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது வீட்டின் முன் வெள்ளை நிற ஜீப்பின் மேல் அமர்ந்தபடி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் வசிப்பது அரும்பாக்கம். இங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில்தான் கூவம் ஆறு இருக்கிறது. அதையொட்டி நிறைய வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் அங்கு இருப்பது பட்டா இல்லாத நிலங்கள்தான்.
அதனால் அப்போது வீடு கட்டும்போது தாழ்வாக கட்டியுள்ளனர். நான் கொஞ்சம் உயரமாக வீட்டை கட்டியதால் தப்பித்தேன். ஆனால் வீட்டுக்குள்ள மீனெல்லாம் வந்துவிட்டது. செம்பரபாக்கம் மீன் வீடுதேடி வருவதெல்லாம் மிகப்பெரிய அதிசயம்தான். செம்பரபாக்கம் ஏரியை திறந்து விடாமல் இருந்திருந்தால் அணை உடைந்திருக்கும். ஏரி உடைந்தால் சென்னையே தண்ணீரில் மூழ்கி விடும் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில்தான், திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது. எனினும் திரிஷா, குஷ்பு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட ஈடுகேட்டு வழக்கு போட இருப்பதாக, மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மழைவெள்ளத்தில் சிக்கிய நிலையில் வாகனத்தின் மேல் அமர்ந்து மன்சூர் அலிகான் வீடியோ பதிவிட்டது வைலராகி வருகிறது.





