நடிகர் விஜய் இப்போது 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மிக முக்கியமான உயரத்தில் இருக்கிறார். இன்னும் ரஜினி கூட அந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை. கமல் ரூ. 150 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. அஜீத்குமார், அடுத்த படம் ரூ. 165 கோடி சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு இப்படி சம்பளத்தை கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர காரணம், அவரது படங்கள் மொக்கையாக இருந்தாலும் கூட 500 கோடி 600 கோடி ரூபாய் என வசூல் கொடுத்து விடுகிறது. பீஸ்ட், லியோ படங்கள் எல்லாம் எந்தளவுக்கு மோசமான படங்கள் என்று படம் பார்த்த ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வசூல் ரீதியாக அவை மிகப்பெரிய வெற்றிப் படங்கள்.
இந்த படங்களில் விஜயை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் மொத்த பட்ஜெட்டில் பத்து சதவீதம் கூட திரும்ப கிடைத்திருக்காது என்ற நிலையில், பீஸ்ட், வாரிசு, லியோ போன்ற விஜய் படங்கள் இவ்வளவு வசூலைக் குவிக்க காரணமே, அவரது மக்கள் செல்வாக்குதான். அதை மட்டுமே, பல ஆயிரம் கோடிகளுடன் தேர்தலை சந்திக்கும் திமுக, அதிமுகவுடன் மோத, 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் அமீர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது, நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகராக இருக்கிறார். இன்னும் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அவரால் தமிழ் சினிமாவில் பிரகாசிக்க முடியும். ஆனால் அதை விட்டுவிட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வருவதை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் அவர் எந்த மாதிரியான அரசியல் செய்யப் போகிறார் என்பதை பொறுத்துதான் அவருக்கான ஆதரவு தருவது குறித்த மக்களின் நிலை தெரிய வரும். இதுவரை தனது பெயரை ஜோசப் விஜய் என பதிவிட்ட விஜய், அறிக்கையில் விஜய் என்று குறிப்பிட்டு இருப்பதில் அரசியல் இருக்கிறது. அவரது பொட்டு வைத்த போட்டோவுக்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது.
நான் எல்லோருக்குமானவன். என்னை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாக மட்டும் பார்க்காதீர்கள் என்று அதன்மூலம் அவர் சொல்ல விரும்புகிறார். தன்னை ஒரு ஆன்மிகவாதியாக அதில் விஜய் காட்டிக் கொண்டார். இதில் ஒன்றும் தவறு இல்லை என்று அதில் கூறியிருக்கிறார் இயக்குநர் அமீர்.





