இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே நடந்த பருத்திவீரன் தயாரிப்பு குறித்த பிரச்னை கடந்த 17 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. மாயவலை படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் அமீர், நேர்காணல் ஒன்றில் இது பற்றி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது அமீரை ஒரு இயக்குநர் என்பதையும் கடந்து, ஒரு தனிப்பட்ட மனிதரை இழிவுபடுத்துவது, தரம்கெட்ட முறையில் விமர்சிப்பது போன்ற வகையில் அமைந்தது. இந்த திமிர்த்தனம் கூடாது என அமீருக்கு ஆதரவாக முக்கிய சினிமா கலைஞர்கள், பாரதிராஜா போன்றவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் இந்த விஷயத்தில் இதுவரை சிவக்குமார், சூர்யா, கார்த்தி போன்றவர்கள் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர். தனது முதல் படமான மௌனம் பேசியதே மூலம், சூர்யாவுக்கு ஒரு நடிகன் என்ற அந்தஸ்தை தந்தவரே இயக்குநர் அமீர்தான். அதே போல் பருத்திவீரன் படம் மூலம் கார்த்தியை, ஹீரோவாக கொண்டு வந்ததும் அமீர்தான். ஆனால் அந்த நன்றி இல்லாமல் சிவக்குமார் குடும்பம் நடந்துக்கொண்டதாக விமர்சனம் எழுந்தது.
எனினும் இந்த விஷயத்தில் இன்னும் பொறுமை காத்து வரும் அமீர், சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதாவது அவர் முதன்முறையாக 2002ம் ஆண்டில் இயக்கிய மௌனம் பேசியதே படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த அறிக்கையை அவர் பதிவு செய்திருந்தார்.
அதில், ஒரு இயக்குநராக எனக்கு அடையாளத்தை பெற்றுத் தந்த என் முதல் படம் மௌனம் பேசியதே வெளியாகி 21 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சினிமாவை நோக்கி படையெடுத்து வரும் எல்லோரது கனவும் நனவாவதில்லை. அப்படி கனவுகளை சுமந்துக்கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம்பிடித்து தூக்கி என் கனவை நனவாக்கிய மெளனம் பேசியதே படத்தின் தயாரிப்பாளர் கணஷே் ரகு, வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நன்றி.
என்னோடு பயணித்து, இந்த படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் நன்றி என தெரிவித்துள்ளார். சூர்யா, கார்த்தி போன்றவர்கள் இன்னும் பருத்திவீரன் படத் தயாரிப்பு விஷயத்தில் காழ்ப்புணர்ச்சியோடு நடந்துக்கொண்ட போதிலும் தனது முதல் படத்தின் கதாநாயகன் என்ற முறையில், என் படத்தின் வெற்றிக்கு கரணம் கொடுத்த சூர்யா என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு, தனது மிகப்பெரிய குணத்தை, மனப்பக்குவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.





