தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளம் நாயகர்களின் முன்னணி நடிகராக இருந்தவர் அப்பாஸ். காதல் தேசம் படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை பெற்ற அப்பாஸ் விஐபி, படையப்பா, பம்மல் கே சம்பந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், திருட்டுப்பயலே என பல முக்கிய வெற்றிப் படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
அப்பாஸ் பெரும்பாலும் இரட்டை நாயகர்களில் ஒருவராகவே நடித்தார். அல்லது நான்கைந்து நடிகர்கள் நடித்த படங்களில் நடித்தார். இதனால் அவருக்கான தனிப்பட்ட அடையாளம் என்பது தமிழ் சினிமாவில் கிடைக்காமல் போனது. ஆனால் அவர் நடித்த படங்களில் அவரது நடிப்பை, கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார்.
பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, ஆசைத்தம்பி, பூவேலி, மின்னலே போன்ற படங்களில் நடித்த வகையில், அப்பாஸ் தனி அடையாளம் பெற்றார். எனினும் அவர் மட்டுமே ஹீரோவாக நடிக்க கூடிய வாய்ப்புகள் தொடர்ந்து அமையவில்லை. மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர் என்பதால், கிராமத்து கதைகளில் அவரால் நடிக்க முடியவில்லை. அவரது தோற்றமே நகரத்து வாலிபராக நடிக்கவே வாய்ப்பை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பை மொத்தமாக இழந்துவிட்ட அப்பாஸ், வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். அங்குள்ள பெட்ரோல் பங்கில் அவர் பணிபுரிவதை போன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இப்போது மீண்டும் சென்னைக்கு வந்துள்ள பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அப்பாஸ், பல விஷயங்களை பேசியிருக்கிறார். அப்போது, எனது மூத்த மகன் மிகவும் அமைதியானவர். எப்போதுமே அமைதியாகவே காணப்படுவார். ஆனால் நான் அந்த வயதில் ஏகப்பட்ட குறும்புகளை, கூத்துகளை செய்தவன். அந்த வயதில் பயங்கர கலாட்டா பேர்வழியாக இருந்திருக்கிறேன். ஆனால் அப்படி அவரிடம் எந்த குணத்தையும் காண முடியவில்லை. அவர் என்னைப் போல இல்லை.
அதனால் அவர் என்னுடைய மகன்தானா, என்பது ஆச்சரியமாகவும் இருந்தது. சில நேரங்களில் சந்தேகமாகவும் இருந்தது. அதனால் டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்தேன். அப்போது என்னுடைய மகன்தான் என்று சொன்னார்கள் என்று அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் நடிகர் அப்பாஸ். பெற்ற மகனையே, தன்னுடைய மகன்தானா என சந்தேகப்பட்டு, டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்ததாக அவர் கூறியது, பயங்கர சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.





