கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி சாலை கிராமத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். மாநாட்டில் தனது கட்சி கொள்கைகளை அறிவித்த நடிகர் மற்றும் கட்சியின் தலைவர் விஜய் 48 நிமிடங்கள் பேசினார்.
சினிமாவில் மட்டுமே வசனங்களை ஆவேசமாக பேசும் விஜய், இயல்பிலேயே அதிர்ந்து பேசி யாருமே பார்த்தது இல்லை. ஷூட்டிங்கில் கேமரா முன்பு நிற்கும்போது மட்டுமே அந்த கேரக்டராக மாறும் விஜய், மற்ற நேரங்களில் சாந்தமான மனிதராக, மிகவும் அமைதியாக இருப்பார் என்று அவருடன் நடித்த பல நடிகர்கள், நடிகைகள், பணிபுரிந்த இயக்குனர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆனால் தனது தவெக கட்சி மாநாட்டில் விஜய் 48 நிமிடங்கள் பேசிய போது, வண்ணத்திரையில் பார்த்த நடிகர் விஜயா இது என்று மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு விஜய் ஆவேசமாக பேசினார். அவரை பற்றிய விமர்சனங்களுக்கும் பதில் கொடுத்தார். குறிப்பாக குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகதான் என்னுடைய அரசியல் எதிரி என்றும் பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த மாநாட்டில் சிறப்பு பார்வையாளர்களாக விஜயின் பெற்றோர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர். நடிகர்கள் ஸ்ரீமன், தாடி பாலாஜியும் கலந்துக்கொண்டனர். ஆனால் விஜயுடன் நடித்த மற்ற நடிகர்கள், நடிகைகள் குறிப்பாக இயக்குனர்கள் யாருமே இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்த்தனர். ஆனால் மாநாட்டுக்கு பிறகு பிரபு, ரஜினி போன்ற சிலர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடத்திய அரசியல் மாநாடு குறித்து அவரது தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருப்பதாவது, தவெக அரசியல் மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். நான் இப்படி பேசுவார் என்று நினைக்கவே இல்லை. அவரது பேச்சைக் கேட்டு அரண்டு போய்விட்டேன். என் மகனின் வேகத்தை அன்றுதான் பார்த்தேன்.
சினிமாவில் விஜய் நடித்து பார்த்திருக்கிறேன். ஆனால் மேடையில் விஜய் அப்படி பேசியதை பார்த்து பிரமித்து விட்டேன். மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்துதான் விஜயை அப்படி பேச வைத்தது என்று தனது மகனை வெகுவாக பாராட்டி பேசியிருக்கிறார் எஸ்ஏ சந்திரசேகர். இதுவரை இப்படி பொதுவெளியில் விஜயை அவரது அப்பா எஸ்ஏசி பாராட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





