பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். பல படங்களை அவரே தயாரித்த நிலையில் இந்தி சினிமாவில் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். விரைவில் ரிலீஸ் ஆக உள்ள கூலி படத்தில் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். சென்னையில் 2 தினங்களுக்கு முன்பு நடந்த கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அமீர்கான் கூறியதாவது, நான் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சித்தாரே ஜமீன் பர் படம் யூடியூப்பில் வெளியாகாது என்று நான் பொய் சொல்லி விட்டேன். வேறு வழியில்லாமல் தான் அப்படி ஒரு பொய்யை நான் ரசிகர்களிடம் சொன்னேன்.
சித்தாரே ஜமீன் பர் படத்தின் திரையரங்க வியாபாரத்தை பாதுகாக்க வேண்டி சூழல் இருந்தது. நான் திரையரங்குகளுக்கு மிகவும் விசுவாசமானவன். என் வாழ்க்கை சினிமாவுடன் தான் தொடங்கியது. எனவே என் படங்களின் திரையரங்கு வியாபாரத்தை பாதுகாக்க எப்போதுமே நான் முயற்சித்து வருகிறேன். இருந்தாலும் நான் பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
இல்லையெனில் இந்த படத்திற்கான என் கனவுகள் அங்கேயே முடிந்திருக்கும். பேர் பர் வியூ மாதிரிக்கும் சந்தா மாதிரிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. நான் ஒரு படத்தை எட்டு வாரங்களுக்கு பிறகு சந்தா மாதிரியில் வெளியிடும் போது மக்கள் என் படத்தை வாங்குவதில்லை. அவர்கள் ஓடிடி தளத்திற்கு மட்டுமே சந்தா செலுத்துகிறார்கள்.
அப்போது யாராவது அதை பார்க்க விரும்பினாலும் பார்க்காவிட்டாலும் அது பொருட்டல்ல. ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து எனக்கு 125 கோடி ரூபாய் வேண்டாம். என் பார்வையாளர்களிடமிருந்து 100 ரூபாய் கிடைப்பதே போதும் என்று அந்த நேர்காணலில் நடிகர் அமீர் கான் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதே நேரத்தில் உண்மையை மறைத்துவிட்டேன் என்றும் அவர் ஒத்துக்கொண்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
இந்தி நடிகர் அமீர்கான் புதிய முயற்சியாக தன்னுடைய சித்தாரே ஜமீன் பர் படத்தை திரையரங்க வெளியீட்டுக்கு பிறகு நேரடியாக யூடியூப்பிற்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தை நேரடியாக யூடியூப்பில் வெளியிட திட்டமிருந்தும் அதற்கு வெளிப்படையாக சொல்லாமல் மறைத்ததற்கு தான் நடிகர் அமீர் கான் தனது ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





