இந்தியில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் அமீர்கான். தங்கல் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் அமீர்கான் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரது கேரக்டர் குறித்த அறிவிப்பை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டது இணையத்தில் வைரலானது.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம் பலே பாண்டியா துரோகி நீர்ப்பறவை முண்டாசுப்பட்டி ஜீவா ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் முன்னாள் பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று தனது குழந்தையின் பெயர் சூட்டு விழாவை நடிகர் விஷ்ணு விஷால் குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாலிவுட் நடிகர் அமீர் கான், விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா தம்பதியின் குழந்தைக்கு மிரா என பெயர் சூட்டி இருக்கிறார்.
மிரா என்றால் அளவு கடந்த அன்பு மற்றும் அமைதி என்று பொருள் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார். இந்தி நடிகர் அமீர்கான் தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர் அமீர்கான், தனது தாயின் உடல் நலம் சரியில்லாததால் சென்னையில் பல மாதங்களாக தனது தாயுடன் அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கி சென்னையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது, அவரை பத்திரமாக மீட்க உதவியது நடிகர் விஷ்ணு விஷால்தான். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நெருக்கத்தை ஏற்படுத்திய நிலையில், விஷ்ணு விஷால் குடும்ப நிகழ்வில் முக்கிய விருந்தினராக அமீர்கான் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.





