தமிழ் திரையுலகில் கதாநாயகனாக 90 காலகட்டத்தில் அறிமுகமான ஒரு சிலர் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் வேளையில் கடந்த 1996-ஆம் ஆண்டு “காதல் தேசம்” படம் மூலமாக தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான அப்பாஸ் இப்போது தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் நியூசிலாந்தில் குடியேறி வசித்து வருகிறார். தமிழ் திரையுலகில் வெளியான முதல் படத்திலேயே ரசிகைகளை மனதை கவர்ந்த நாயகனாக நல்ல இடத்தை பிடித்த அப்பாஸ் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடிக்கவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார்.

அதுமட்டும் இன்றி ரஜினிகாந்த்துடன் “படையப்பா” படத்திலும், கமலஹாசனுடன் “பம்மல் கே சம்பந்தம்” படத்திலும் நடித்து தனது அசத்தலான நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் அதன் பிறகு சரிவை சந்தித்த அப்பாஸின் திரைப்பயணம் தொடர்ச்சியான தோல்வி படங்களால் சிக்கலை சந்தித்தது. அதோடு தொடர்ச்சியான தோல்விகளால் ராசியில்லா நாயகன் என்ற முத்திரை குத்தப்பட்ட அப்பாஸ் 2015-ஆம் ஆண்டோடு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
அதன் பிறகு ஒரு சில ஆண்டுகள் அவர் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாத வேளையில் அவர் இங்கு நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் வெளிநாட்டில் குடியேறிவிட்டார் என்ற தகவல் மட்டும் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்தில் வசித்து வரும் அப்பாஸ் அங்கு தான் என்ன செய்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அப்பாஸ் கூறியதாவது : என்னுடைய கரியரின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் அதன் பிறகு பல படங்கள் தோல்வியடைந்ததால் எனக்கு மிகப்பெரிய அளவில் பணக்கஷ்டம் ஏற்பட்டது.

வீட்டு வாடகைக்கு கூட கொடுக்க பணம் இல்லாத அளவிற்கு கஷ்டப்பட்டேன். அதன் பிறகும் என்னால் நடிப்பை தொடர முடியும் என்று தோன்றவில்லை. எனவே நடிப்பில் இருந்து விலகி குடும்பத்தை காப்பாற்ற நியூசிலாந்து வந்த நான் டாக்ஸி ஓட்டினேன். பிறகு பைக் மெக்கானிக்காகவும் வேலை செய்தேன். வெளிநாட்டில் நான் வசித்து வந்த போது மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், இறந்து விட்டதாகவும் கூட தகவல் வெளியாகி எனது நண்பர்கள் சிலர் எனக்கு போன் செய்திருக்கிறார்கள். ஆனால் நான் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இல்லாததால் அப்படிப்பட்ட செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. கொரோனா நேரத்தில் தான் நான் சமூகவலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாட ஆரம்பித்தேன்.
அந்த நேரத்தில் தற்கொலை எண்ணத்துடன் போராடுபவர்களுக்கு உதவ நினைத்தேன். ஏனென்றால் நானும் தற்கொலை எண்ணம் வந்து அதிலிருந்து மீண்டு வந்தவன். எனவே என்னுடைய அனுபவங்களை அவர்களிடம் பகிர்வதற்காகவே அது போன்ற கஷ்டமான நிலையில் இருக்கும் நபர்களுக்கு என்னுடைய வார்த்தைகள் மூலம் ஊக்கமளித்தேன். நான் என்னுடைய சிறுவயதில் பத்தாவது வகுப்பில் தோல்வி அடைந்தபோது ஏற்பட்ட வருத்தத்தால் சாலையில் எதிரில் வந்த வாகனத்தின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் என்னோடு சேர்ந்து அந்த நபரின் வாழ்க்கையும் அதனால் பாதிக்கப்படுமே என்று தோன்றி அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டேன். இப்போது நான் நியூசிலாந்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என்று அப்பாஸ் கூறியுள்ளார். நடிகர் அப்பாஸிற்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். அதோடு அவரது மனைவி ஒரு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





