மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அப்பாஸ், கதிர் இயக்கத்தில் உருவான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வினித், தபு ஆகியோர் நடிப்பில் முக்கோண காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பெரும் வெற்றி பெற்றது. ஏ ஆர் ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்க, படத்தில் நடித்த வினித் மற்றும் அப்பாஸ் ஆகிய இருவரும் அன்றைய தேதியில் பரபரப்பாக பேசப்பட்டனர்.

இதன் பின்னர் விஐபி, பூச்சூடவா படங்களில் நடித்த அப்பாஸிற்கு, பெரும்பாலான படங்கள் தோல்வியாகவே அமைந்தன. இருப்பினும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அவர், படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகனாக நடித்து பலரையும் கவனிக்க வைத்தார்.
இந்த காலகட்டங்களில் அப்பாஸ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வந்ததால், காதலுக்கு மரியாதை மற்றும் ஜீன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் அந்த சமயத்திலேயே பெண்களின் சாக்லேட் பாயாக விளங்கிய அப்பாஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

இதன்பிறகு, ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் படங்களில் தலைகாட்டிய அப்பாஸுக்கு அதன் பிறகு நடிப்பில் பெரிய வாய்ப்பு இல்லாமல் போனது. சில காலங்களுக்குப் பிறகு திருட்டுப் பயலே, குரு என் ஆளு திரைப்படங்களில் நடித்த அவர், சிறு சிறு விளம்பரங்களில் காட்சியளித்து பின்பு காணாமல் போனார். ஒரு காலத்தில், இளம் நடிகராக ரேஸில் ஓடிக் கொண்டிருந்த அப்பாஸ் பெரிய நட்சத்திரமாக வருவார் என பலராலும் கணிக்கப்பட, அது பொய்த்துப் போகும் வகையில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது.
இந்த நிலையில் நீண்ட காலங்களுக்குப் பிறகு அவர் தனியார் யு டியூப் சேனலுக்கு பேட்டியை அளித்திருக்கிறார். அப்போது பேசிய அப்பாஸ், தனது பழைய பட அனுபவங்களை எடுத்துரைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயுடன் எனக்கு ஒரு வசனம் இருந்தது. நான் பாரதியாரின் கவிதையை அங்கு பேச வேண்டும். எங்களுக்கு சற்று தொலைவில் மம்முட்டி இருப்பார். நான் அந்த டயலாக்கில் இரண்டு மூன்று டேக் வாங்கியதை கண்டு அவர் முகம் சுளித்ததை என்னால் பார்க்க முடிந்தது. இதனால் எனக்கு அங்கு நம்பிக்கையே போய்விட்டது.
ஆனால் மம்முட்டி அப்படி அல்ல, எந்த டயலாக் என்றாலும் அதை உடனுக்குடன் டெலிவர் செய்து விடுவார். ஆனந்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, இது பற்றி அவரிடம் கேட்க, அவர் அசால்டாக முக பாவணையில் மட்டுமே பதில் அளித்தார். பிறகு சில நாட்களில், நானும் மம்முட்டியும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். இருவரும் இணைந்து பள்ளிவாசலுக்கு செல்வோம். ஒருமுறை ஆனந்தம் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நான், முரளி, மம்முட்டி ஆகிய மூவரும் தனித்தனி கார்களில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் சென்றோம் என்று தெரிவித்தார். பழைய நினைவுகளை அப்பாஸ் அசை போட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





