தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் விஜய் கூட மாலை 6 மணிக்கு மேல் இரவு படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள மாட்டார். அதே போல் வாரந்தோறும் ஞாயிறு அன்று விடுமுறை என்ற பாலிசியும் அவர் வைத்திருந்தார். இப்படி தான் பல ஹீரோக்கள் ஆபீஸ் டூட்டி போல சினிமாவில் 8 மணி நேரம் ஷிப்ட் போல பணி செய்கின்றனர்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த போதே நேரம் காலம் பாராமல் உழைத்திருக்கிறார். இவ்வளவு நேரம்தான் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வேன் என்ற பாலிசி எதுவும் வைக்காமல் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக 72 மணி நேரம் அதாவது தொடர்ந்து 3 நாட்கள் ஒரு படத்துக்காக நடித்துக் கொடுத்திருக்கிறார்.
கடந்த 1980 – 90களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு வருவது வழக்கமாக இருந்தது. ரஜினிக்கு அது மிகவும் பிடித்தமான சென்டிமென்ட் ஆகவும் இருந்தது. 1991ம் ஆண்டு பொங்கலுக்கு ஒரு சூப்பரான படம் கொடுக்க வேண்டும் என்று ரஜினி திட்டமிட்டு அப்போது கமர்சியல் இயக்குனராக வளர்ந்து வந்த ராஜசேகரை வைத்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தார்.
ரஜினிகாந்த் மஞ்சுளா ரமேஷ் அரவிந்த் நடிப்பில் காலம் மாறிப் போச்சு என்ற டைட்டில் வைத்து படம் துவங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு அந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. அதன் பிறகு அவசர அவசரமாக கதை தேடி 1989ம் ஆண்டில் வெளியான கன்னட படம் தேவா என்ற படத்தை ரீமேக் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அந்தப் படம் தான் நடிகர் ரஜினிகாந்த் கௌதமி நடித்த தர்மதுரை.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் சில சூழ்நிலைகளால் தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பொங்கலுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில் படப்பிடிப்பு பணிகள் தாமதமானது. அதனால் இந்த பொங்கலுக்கு ரஜினி படம் ரிலீஸ் இல்லை என்ற தகவல் வெளியானது. இது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.
இதனால் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு தடையாக இருந்த பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் தானே இறங்கி சரி செய்தார். கடைசி நாட்களில் தொடர்ந்து 72 மணி நேரம் அதாவது 3 நாட்கள் தொடர்ச்சியாக நடித்து தர்மதுரை படத்தை ரஜினிகாந்த் முடித்துக் கொடுத்தார். இந்த 72 மணி நேரம் தொடர்ந்து நடித்த ரஜினிகாந்தின் சாதனையை இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் முறியடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





