தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் அஜீத்குமார். இப்போது அவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி என்ற படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், குட்பேட் அக்லி பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் நடிப்பதை காட்டிலும் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜீத்குமார். ஆரம்பத்தில் இருந்தே பைக் ரேஸில் கலந்துக்கொண்ட அவர் இப்போது கார் ரேஸ் ரைபிள் சுடுதல் மினி ஹெலிகாப்டர் இயக்குதல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்று வருகிறார்.
இப்போது அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற பெயரில் ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார் கலந்துக்கொண்டுள்ளார். அணியின் தலைவராகவும், கார் ஓட்டுனராகவும் இந்த போட்டியில் அவர் கலந்திருக்கிறார். கடந்த மாதம் துபாயிலும், அதைத் தொடர்ந்து போர்ச்சுக்கல்லிலும் இப்போது ஸ்பெயினிலும் இந்த கார் ரேஸ் நடந்து வருகிறது.
துபாயில் நடந்த கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜீத்குமார் கார் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அவர் கார் பந்தயத்தில் பங்கேற்காமல் அணியின் தலைவராக மட்டுமே செயல்பட்டார். போர்ச்சுக்கல்லில் நடந்த கார் ரேஸிலும் நடிகர் அஜீத்குமார் விபத்தில் சிக்கினார். ஆனால் இந்த 2 விபத்துகளிலும் அவருக்கு அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் வேலன்ஸியா நகரில் நடந்து வரும் கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றுள்ளார். நேற்று நடந்த இந்த கார் ரேஸில் வேகமாக சென்ற நடிகர் அஜீத்குமாரின் கார், முன்னால் சென்ற காரை முந்திச் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே பறந்து போய் 3 முறை பல்டி அடித்து பிறகு நின்றது. இதை நேரிலும் வீடியோவிலும் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர்.
ஆனால் இந்த விபத்திலும் நடிகர் அஜீத்குமாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கிய காரில் இருந்து தானாக வெளியே வந்த நடிகர் அஜீத்குமார் காரை விட்டு இறங்கி சென்றதை பார்த்த பிறகுதான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இப்படி உயிரை பணயம் வைத்து இந்த கார் ரேஸில் அஜீத்குமார் பங்கேற்பது அவசியமா என ஏகே ரசிகர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.





