ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல், டைரக்டர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடிகர் அதர்வா நடிப்பு ஒன்றே போதும், அவரது நடிப்பு திறமையை சினிமா ரசிகர் உலகமே அறியச் செய்யும். அதுபோன்ற அற்புத நடிகர் அதர்வா. தமிழ் சினிமாவில் நடிகர் முரளிக்கு என்று ஒரு இடம் இருந்தது. அதே போல் அவரது மகன் அதர்வாவுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
பாணா காத்தாடி படம் மூலம் நாயகனாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து ஈட்டி, 100, இமைக்கா நொடிகள், கணிதன், சண்டி வீரன், பரதேசி உள்ளிட்ட படங்களில் அதர்வா நடிப்பு குறையே சொல்ல முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக இருந்தது. அதிலும் பரதேசி படத்தில், நாயன்மாரே என்று கூவும் ஒரு அப்பாவி நாயகனாக, அவரை மாற்றியிருந்தார் இயக்குனர் பாலா.
நடிகர் முரளி, தமிழ் சினிமாவில் 1980, 90களில் மிக முக்கியமான நடிகராக வலம் வந்தவர். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அவருக்கு ஷோபா என்கிற மனைவி, அதர்வா, ஆகாஷ் என 2 மகன்கள், காவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் காவ்யா, டாக்டராக இருக்கிறார். அதர்வாவை தொடர்ந்து இப்போது அவரது தம்பி ஆகாஷ் நடிக்க வந்துவிட்டார்.
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்ற படத்தில், ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு விழா சமீபத்தில் நடந்தது. வழக்கமாக இதுபோன்ற விழாக்களில் பங்கேற்காத நடிகை நயன்தாரா இந்த விழாவில் பங்கேற்று, பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இது எனது குடும்ப விழா என்றும் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் நடிகர் அதர்வா பேசியதாவது, இந்த நாள் என்னுடைய குடும்பத்துக்கு சந்தோஷமான நாளாக இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமாகும் போது என்னுடைய அப்பா முரளி இருந்தார். அப்போது அவரது மனநிலை என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இன்று ஆகாஷ் மேடையில் இருக்கும்போது நான் கீழே இருக்கிறேன். அப்பாவுடைய மனநிலையை இப்போதுதான் நான் உணர்ந்தேன்.
அப்பா இறந்த போது, எங்கள் வீட்டில் அனைவருமே மிகவும் உடைந்து போய் விட்டோம். அப்போது ஆகாஷ் சின்ன பையன். அவனுக்கு என்ன நடந்தது என்று புரிந்ததா, இல்லையா எனத் தெரியவில்லை. அவன் முன்பு அழக்கூடாது என நினைத்தும், ஒரு கட்டத்தில் உடைந்து அழுதுவிட்டேன். அப்போது அவன் என் கையை பிடித்துக்கொண்டு, அம்மாவை இனி நாம் நன்றாக பார்த்துக் கொள்ளலாம், என்று எனக்கு தைரியம் சொன்னான். இப்போது அவன் ஹீரோ ஆகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, என்று பேசினார்.





