காமெடி நடிகராக இருந்து இப்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சூரி. மதுரையில் இருந்து சென்னைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர்தான் சூரி. ஆனால் ஆரம்பத்தில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் கிடைத்த வேலை எல்லாம் செய்திருக்கிறார். எலக்ட்ரீசியன் பிளம்பர் ரிசப்னிஸ்ட் என பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.
சென்னைக்கு வரும் முன்பு திருப்பூரில் பல்லடம் ரோட்டில் தமிழ்நாட்டு தியேட்டர் அருகில் ஒரு பனியன் கம்பெனியில் 7 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்திருக்கிறார். அதை நடிகர் சூரியே சில நேர்காணலின் போது வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அடிமட்ட நிலையில் சாதாரணமாக இருந்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்த கடும் உழைப்பாளிதான் நடிகர் சூரி.
காமெடி நடிப்பில் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற நடிகர் சூரியை ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் அவரை நடிக்க வைத்து கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுத் தந்தார். ஆனால் சீமராஜா படத்தில் சிக்ஸ்பேக் ஆக நடிகர் சூரி நடித்ததன் விளைவே விடுதலை படத்தில் கதாநாயகனாகும் வாய்ப்பை சூரிக்கு கொடுத்தது.
விடுதலை படத்தில் சூரிக்கு கொடுக்கப்பட்ட அதிக முக்கியத்துவம் விடுதலை 2 படத்தில் கொடுக்கப்படவில்லை. விடுதலை 2ம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்குதான் அதிக காட்சிகள் இருந்தன. இதையடுத்து சூரி நடித்த 3வது கருடன் படம் பெரிய வெற்றியை சூரிக்கு கொடுத்தது. இதில் நடிகர் சசிக்குமார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்னர். எனினும் சொக்கன் கேரக்டரில் சூரி நடிப்பு அதிக கவனம் பெற்றது.
இந்நிலையில் சூரி நடித்த 4வது படம் கொட்டுக்காளி பெரிய ஏமாற்றத்தை தந்த நிலையில் இப்போது மாமன் என்ற படத்தில் சூரி நடித்திருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் படத்தை டைரக்ட் செய்திருந்தாலும் படத்தின் கதை நடிகர் சூரி எழுதியதுதான். காமெடியன் ஹீரோ அவதாரத்தை தொடர்ந்து நடிகர் சூரி இப்போது கதை ஆசிரியராக மாமன் படத்தில் உருவெடுத்திருக்கிறார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் நடிகர் சூரி ஒரு நேர்காணலில் பேசுகையில், என் அப்பா வாழ்க்கையை நான் படமாக எடுக்கப் போகிறேன். அந்த படத்தை நானே டைரக்ட் செய்யப் போகிறேன் என்றும் கூறியிருந்தார். அதற்கு முன்னோட்டமாக தான் இந்த மாமன் படத்தின் கதையை எழுதி இருக்கிறார். அதனால் இந்த படத்தின் கதை பெரிய வெற்றியை பெற்றால், அடுத்து கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற வரிகளுக்கு கீழ் சூரி என்ற பெயரை போட்டுக்கொள்ள ஆசைப்படுகிறார். அந்த திட்டத்தில்தான் மாமன் படத்தின் அபார வெற்றியை நடிகர் சூரி மிக ஆவலாக எதிர்பார்க்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





