நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார். அவர் துவங்கிய கட்சி பெயரிலேயே வெற்றி கழகம் என்பதில் ‘க்’என்ற எழுத்து இல்லாமல் பிழையாக உள்ளது. தமிழகம் என்பதை தமிழ்நாடு என குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும், அவரது அறிக்கையில் பல விஷயங்கள் முரண்பட்டதாக இருக்கிறது. குறிப்பாக சாதியற்ற அரசியல் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், தமிழக அரசியலில் முக்கிய ரோல் வகிப்பதே சாதிகள்தான். தவிர, கட்சி துவங்கிய உடனே நடிப்பை விட்டு முற்றிலும் விலகுவது தவறான முடிவு என்றும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது, விஜய் நடிகராக இருக்கும் வரை அவரது சொந்த பிரச்னையையே வெளியில் பேச மாட்டார்கள். நான் அரசியலுக்கு வந்தால், எல்லோரும் கேள்வி கேட்பார்கள். மனைவி, பிள்ளைகளை அவர் பிரிந்து வாழ்கிறார். அதுபற்றி அவர் வெளிப்படையாக பேசுவாரா?
விஜய் லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிறார். அவரது ஒவ்வொரு படமும் ரிலீஸாகும் போது அரசு நிர்ணயித்த விலையை விட தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கிறார்கள். இதை ஒருபோதும் விஜய் தடுத்தது இல்லை. அவர் நடித்த கோட் படம் வெளியாகும்போது அந்த மாதிரி அதிக விலைக்கு டிக்கெட் விற்கக் கூடாது என்று விஜய் சொல்வாரா, அப்படி சொன்னால் விஜய் லஞ்சத்தை ஒழிப்பார் என்று நம்பலாம்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்கிறார். கட்சி ஆரம்பித்தவுடன் முதல் தேர்தலையே புறக்கணித்து விட்டால், மக்கள் எப்படி அவரை நம்புவார்கள்? வருகிற தேர்தலில் அவரது ரசிகர்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவார்களா, மாட்டார்களா, இல்லை தேர்தலை புறக்கணிப்பார்களா
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் துவங்கியது முதல் இன்று வரை பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் ஆட்சியை பிடித்தனர். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் எப்படி ஆட்சியை பிடிக்க முடியும். இதற்கெல்லாம் நடிகர் விஜயிடம் பதில் இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.





