தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகளுக்கு என்று சில மாண்புகள் உண்டு. சினிமாவில் என்னதான் காமெடியாக பேசி நடித்து ஜாலியாக நண்பர்களாக நடந்துக் கொண்டாலும், பொதுவெளியில் திரைப்பட விழாக்களில், மேடைகளில் ஒருவருக்கு ஒருவர் மரியாதையாக நடந்துக்கொள்வர். ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அதை மற்ற கலைஞர்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் தெலுங்கு சினிமாவை பொருத்த வரை, இதுபோன்ற மதிப்பு, மரியாதை எல்லாம் சக நடிகர், நடிகைகளுக்கு கிடைக்காது. அங்கு பெரிய நடிகர்கள் என்றால், சிறிய நடிகர்களை மதிக்க மாட்டார்கள். குறிப்பாக நடிகைகள் என்றால், அவர்களை பொருத்தவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.
கடந்த முறை நடந்த பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துக்கொண்ட நடிகை விசித்ரா, கேரளா மலம்புழாவில் நடந்த ஒரு ஷூட்டிங்கில் ஒரு தெலுங்கு நடிகர், என்னை நைட் ரூமுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டு போனார். அதை அப்படி போகாததால், என்னை அவரது ஆட்களை விட்டு மிரட்டினார். கதவை தட்டி பயமுத்தினார்கள்.
அதன்பிறகு மற்ற அறைகளில் மாறி மாறி தங்கி தப்பித்தேன். மறுநாள் ஷூட்டிங்கிலும் டான்ஸ் ஆடும்போது என்னை அந்த நடிகர் தப்பான இடங்களில் பலமுறை தொட்டார். அதுகுறித்து டான்ஸ் மாஸ்டரிடம் சொன்ன போது, அவர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில், விசித்ராவிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்த தெலுங்கு நடிகர் பாலைய்யா என்கிற பாலகிருஷ்ணன்தான் என சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், தமிழில் கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்த நடிகை அஞ்சலி, தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் நடிகை அஞ்சலி பங்கேற்றார்.
அப்போது மேடையில் அவர் சக நடிகை ஒருவருடன் நின்றிருந்த போது மேடையேறி வந்த நடிகர் பாலகிருஷ்ணா, அவர்களுக்கு அருகில் வந்து நின்றார், அப்போது அஞ்சலியை பார்த்து தள்ளி நில்லு என்று அவர் சொல்ல, அதை அஞ்சலி சரியாக கவனிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த பாலகிருஷ்ணா, அவரது தோளை பற்றி வேகமாக தள்ளிவிட்டார். இதனால் சில அடி பின்னால் போய் தடுமாறிய அஞ்சலி, அதிர்ச்சியடைந்தார். பிறகு அவரே அங்கு நடந்தது ஒரு பெரிய காமெடி போல, சிரித்து சமாளிக்கிறார். அந்த வீடியோ வைரலான நிலையில், வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், ரொம்ப அசிங்கமாக இருக்குது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.





