இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் கங்குவா. இந்த படம் வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு வேகமாக ஈடுபட்டு வருகிறது. கங்குவா படத்தில் இடம்பெற்ற 2ம் பாடலான யோலோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வரலாற்று கதை பின்னணியில் உருவான கங்குவா படத்தில் சூர்யா 2 கேரக்டர்களில் நடித்திருக்கிறார். திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில் நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் மற்றும் சமீபத்தில் வெளியான சார் படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட் பேசியதாவது, நான் அரசியலைப் பற்றி பேச ஆசைப்படுகிறேன். ஒரு சூப்பர் ஸ்டார், தலைவன் ரசிகர்களை எப்படி வழி நடத்த வேண்டுமோ, அப்படி உங்களைப் போல வழி நடத்த வேண்டும். தர்மம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும். உதவி செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திட வேண்டும். தன்னுடைய பிரச்சனையை எப்படி பார்த்துக்கணும் என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கெல்லாம் மீறி படிப்பையும் கொடுத்துக்க வேணும். இதற்கெல்லாம் அடுத்தது தான் அரசியலுக்கு வரணும். ஒரு தலைவன் என்ன வேலை செய்கிறான் என்பது முக்கியமில்லை. நடிகராக இருக்கலாம், பேச்சாளராக இருக்கலாம், இயக்குனராக இருக்கலாம், எழுத்தாளராக இருக்கலாம்.
ஆனால் அந்த தலைவனோட அடித்தளம் ரசிகனை முட்டாளாக வைத்திருப்பது அல்ல. அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் ( சூர்யா) அரசியலுக்கு வரணும். கமல் சாருக்கு பிறகு சிறந்த நடிகராக இருக்கிறீர்கள். மனசுக்கு திருப்திகரமான படங்களை நடித்து முடித்துவிட்டு கட்டாயமாக நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று போஸ் வெங்கட் பேசினார்.
இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவுக்கு அரசியல் அழைப்பு விடுத்து கட்டாயமாக அரசியலுக்கு வருமாறு வேண்டுகோள் வைத்து போஸ் வெங்கட் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று விக்கிரவாண்டியில் விஜயின் முதல் அரசியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவு நடிகர் சூர்யாவை அரசியலுக்கு வாங்க என்று அழைப்பு விடுத்து போஸ் வெங்கட் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் விஜய்க்கு போட்டியாக தான் சூர்யாவை அரசியலுக்கு வர சொல்கிறாரா? அவர் சுட்டிக்காட்டி பேசியதும் விஜயை குறை சொல்லிதானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகிறது.





