நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( தி கோட்) படம் நேற்று வெளியானது. இரட்டை வேடங்களில் விஜய் நடித்த இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் குறித்த கலவையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இருப்பினும் விஜய் ரசிகர்கள் தி கோட் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக, காமெடி நடிகராக இருந்து வருபவர் கூல் சுரேஷ். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கடந்த ஆண்டு பங்கேற்றார். அவ்வப்போது சோஷியல் மீடியாவில் குண்டக்க மண்டக்க வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். சில மாதங்களுக்கு முன் சினிமா விழா ஒன்றில் மேடையில் தொகுப்பாளினிக்கு பூமாலையை கழுத்தில் போட்டு சர்ச்சையிலும் சிக்கினார்.
ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார், சிம்பு என முன்னணி நடிகர்களின் தீவிர ரசிகராக உள்ள கூல் சுரேஷ், அவர்கள் நடித்த புதிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும்போது, ஏதேனும் அலப்பரை செய்து படம் பார்க்க வித்யாசமாக வருவார். செய்தியாளர்களிடம் படம் குறித்தும் விமர்சித்து பேசுவார்.
கடந்தமுறை இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆன போது இந்தியன் தாத்தா கெட்டப்பில் குதிரையில் தியேட்டருக்கு வந்தார். குதிரை மீது அமர்ந்து வந்த அவரை பார்த்த பலரும், இது இந்தியன் தாத்தா மாதிரி தெரியலையே, கூர்கா போல தான் இருக்காரு என்று கிண்டலடித்தனர். அதுவும் வலைதளங்களில் வைரலானது.
நேற்று விஜய் நடிப்பில் தி கோட் படம் ரிலீஸான நிலையில், கோட் என்றால் ஆடு என்பதால் கூல் சுரேஷ் ஆடு ஒன்றுடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார். இதனால் அந்த தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது. இது படத்துக்கு ஒரு விதமான பிரமோவாகவும் அமைந்தது. ஆடுடன் வந்த கூல் சுரேஷ் என வலைதளங்களில் இதுவும் வைரலானது.
இதுகுறித்து நடிகர் கூல் சுரேஷ் கூறியதாவது, தி கோட் படம் புரமோசனுக்காக ஆடுடன் வந்தேன். முதலில் யானையை தான் கொண்டு வரலாம் என்று இருந்தேன். அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்றதால் ஆடுடன் வந்திருக்கிறேன். யானையை கொண்டு வர நினைக்க காரணம், விஜய் கட்சிக் கொடியில் யானை இருப்பதுதான். விஜய் தி கோட் 2026ல் போடுங்க ஓட்டு என்று கூறியிருக்கிறார் கூல் சுரேஷ்.





