தமிழ் சினிமாவில் எத்தனையோ குணச்சித்திர நடிகர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் அத்தனை பேருக்குமே முன்னோடியாக திகழ்ந்தவர் நிச்சயம் நடிகர் டெல்லி கணேஷ் மட்டும்தான். காமெடியான கதாபாத்திரம் என்றாலும் சரி, வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி கலந்துகட்டி விளையாடுவார் இந்த நடிப்பின் சிகரம்.
நெல்லையை பூர்வீகமாகக் கொண்ட டெல்லி கணேஷ் ஆரம்பத்தில் இந்திய விமானப்படையில் இருந்தவர். கிட்டத்தட்ட அவர் அதில் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு தனது நடிப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் அதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் டெல்லி கணேஷ்.
கே பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் என்னும் திரைப்படம் தான் டெல்லி கணேஷ் தமிழில் முதல் முறையாக அறிமுகமான திரைப்படம். அங்கிருந்து தனது பயணத்தை அவர் தொடங்கினார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்த டெல்லி கணேஷ் மெல்ல மெல்ல ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தார்.
கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படம் டெல்லி கணேஷ்க்கு மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். அதில், இந்தி தெரிந்த தமிழ் காரராக படம் முழுக்க கமல்ஹாசன் உடன் அவர் பயணிப்பார். இதே போலவே, அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார்.
இதில் அவருக்கு, வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதனை கனக்கச்சிதமாக செய்து முடித்தார் டெல்லி கணேஷ். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்து வந்தார். இதில் முக்கியமாக கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தைக் கூறலாம். அதில் விமலுக்கு அறிவுரை வழங்கும் தந்தை கதாபாத்திரத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார்.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியன் 2, அரண்மனை 4 என அவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகின. 80 வயதாகும் அவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் திடீரென காலமானார். அவரது மறைவுக்கு, திரை உலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராமாபுரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.





