நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் குபேரா. தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தி மலையாளம் கன்னடம் மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட நிலையில் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ளது. தெலுங்கில் கிடைத்த அளவுக்கு தமிழில் குபேரா படத்துக்கு பெரிய ஆதரவு இல்லை.
பிச்சைக்காரன் கேரக்டரில் தனுஷ் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் படத்தின் நீளம் ரசிகர்களை நிலைகுலைய செய்து விடுகிறது. ராஷ்மிகா மந்தனா கேரக்டர் இந்த படத்தில் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. படத்தின் நாயகன் தனுஷ் என்றாலும் ஸ்கோர் செய்வது நாகர்ஜூனா தான் என்றும் பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
ராயன் படம் வன்முறை கலந்த ஆக்சன் படமாக இருந்தது. படத்தின் திரைக்கதை மற்றும் கதைக்களம் வித்யாசமாக இருந்ததால் வன்முறை அதிகமாக இருந்தும் படம் ஜெயித்தது. அதே நேரத்தில் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பிளாப் ஆனது. அதே போல் குபேரா படத்துக்கும் கலவையான விமர்சனங்கள்தான் இருந்து வருகின்றன.
இந்த படத்தை 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை சேகர் கம்முலா எடுத்து வைத்திருக்கிறார். தெலுங்கில் இதே நேரத்தில்தான் படம் ஓடுகிறது. படத்தின் நீளத்தை குறைக்கச் சொன்னவர்களிடம் உறுதியாக முடியாது என்றுதான் சேகர் கம்முலா மறுத்துகிறார். புஷ்பா 2 பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் அதிக நேரம்தானே ஓடியது, படத்தின் நீளம் வெற்றியை பாதிக்காது என்றும் கூறியிருக்கிறார்.
படத்தின் நீளத்தை எந்த காரணத்தை கொண்டும் குறைக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்த சேகர் கம்முலாவிடம் கடைசி நேரத்தில் படத்தின் நாயகன் தனுஷ்தான் விடாப்பிடியாக பேசியிருக்கிறார். தமிழ் ஆடியன்ஸ் அவ்வளவு நேரம் எல்லாம் பொறுமையாக இருக்க மாட்டார்கள். திரைக்கதை சுவாரசியமாகவே இருந்தாலும் இரண்டரை மணி நேரத்துக்குள் மேல் அவர்களால் உட்கார முடியாது என்று விளக்கி இருக்கிறார்.
அதன்பிறகுதான் குபேரா படத்தின் 14 நிமிட காட்சிகளை வேண்டா வெறுப்பாக நீக்கி இருக்கிறார் சேகர் கம்முலா. அதே நேரத்தில் தெலுங்கு வெர்சனில் அந்த 14 நிமிட காட்சிகளும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் 3 மணி நேரம் ஒரு நிமிடம் ஓடும் குபேரா படத்துக்கே இவ்வளவு எதிர்ப்பு வரும் நிலையில், இன்னும் 14 நிமிடங்கள் நீக்காமல் இருந்திருந்தால் குபேரா இன்னும் அடிவாங்கியிருக்கும். கடைசி நேரத்தில் தமிழ் ரசிகர்களை தனுஷ்தான் காப்பாற்றி இருக்கிறார்.





