தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த வெற்றி நடிகராக இருப்பவர் தனுஷ். சிறந்த நடிகராக மட்டுமின்றி பாடகராக, தயாரிப்பாளராக சமீபத்தில் இயக்குனராகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறார். அவரது நடிப்பில் உருவான குபேரா படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதே போல் அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் வருகிற பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸாக உள்ளது.
நடிகர் தனுஷ் சமீபத்தில்தான் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து பெற்று, சட்டரீதியாக பிரிந்துள்ளார். இனி ரஜினியின் முன்னாள் மருமகன் என்றுதான் அவரை கூறுவார்கள். சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் பல பிரச்னைகளை சந்தித்து வரும் நடிகர் தனுஷ். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதில் தனுஷ் கூறியதாவது, ஒரு படம் தடால் ன்னு நல்லா ஓடும், ஒரு படம் ஓடாது. ஒரு விஷயத்தில் வெற்றி எப்படி உள்ளதோ, அதேபோல் தோல்வியும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதுவும் ஒரு பகுதிதான். ஆனால் தொடர்ந்து தோல்விகளை சந்திப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு முறை தோல்வி அடையும் போது, கீழே விழுந்து எழுந்து நிற்கணும். மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தாக வேண்டும். இதில் வேறு வழி இல்லை.
எந்த மாதிரியான படம் பண்ணுவது என்ற குழப்பம் ஒவ்வொரு வெள்ளிக்கிழையும் வரும். அன்றுதான் நிறைய புதிய படங்கள் ரிலீஸாகும். இந்த படம் கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகுமுன்னு பயங்கரமா நம்பி, படம் ரிலீஸ்க்கு முன்னாடியே பார்ட்டி எல்லாம் கொடுத்துட்டு சுத்தீட்டு இருப்போம். ஆனால் அந்த படம் ஒண்ணுமே இல்லாம போயிடும்.
ஒரு படம் ஏண்டா இந்த படத்துல நடிச்சோம், இந்த படம் ஓடாதுன்னு நினைப்போம், ஆனா அந்த படம் பெரிய அளவுல ஓடிடும். அதனால எந்த மாதிரியான படம் வெற்றி பெறும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படி யாராலும் அதை முன்கூட்டியே யூகிக்க முடியாது. யாருக்குமே அது கரெக்ட்டா தெரியவே தெரியாது.
நம்பிக்கை வைத்து ஒரு படத்துக்காக உழைக்க வேண்டியதுதான். அது கிளிக் ஆவது நம்ம கையில் இல்லை. எந்த மாதிரியான படம் பண்ணுவது என்ற குழப்பம் வாழ்க்கை முழுவதும் எனக்கு இருக்கதான் போகிறது. அதனால் எந்த அளவுக்கு நம் வேலையை சிறப்பாக செய்ய முடியுமோ, அதை நாம் செய்தாக வேண்டும் என்று நடிகர் தனுஷ் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





