ஒரு திரைப்படம் உருவாக எப்படி தயாரிப்பாளர் முதுகெலும்பாக இருக்கிறாரோ அதே போல் ஒரு படம் வெற்றி பெற முதுகெலும்பாக இருப்பது ரசிகர்கள்தான். ஒரு படம் பிரமோசன் எதுவுமே இல்லாமல் தியேட்டருக்கு வந்தாலும் நல்ல படமாக இருந்தால் அதை ரசிகர்களே ஜெயிக்க வைத்து விடுவார்கள். அப்படி தான் பார்க்கிங் குட்நைட் லப்பர் பந்து டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் ஜெயித்தன.
அதே நேரத்தில் இயக்குனர்கள் மணிரத்னம் ஷங்கர் போன்ற ஜாம்பவான்கள் டைரக்ட் செய்திருந்தாலும் நடிகர் கமல்ஹாசனே நடித்திருந்தாலும் என்னதான் ஊர் ஊராக போய் பிரமோசன் செய்தாலும் படம் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். இதற்கு சரியான உதாரணமாக இந்தியன் 2 தக்லைஃப் போன்ற படங்கள் இருந்தன.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக முன்னணி வரிசையில் இருக்கிறார். இதுவரை 51 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய 3 படங்கள் அவரது டைரக்ஷனில் வெளிவந்திருக்கிறது. அடுத்ததாக இட்லி கடை என்ற படமும் அக்டோபர் மாதம் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது.
நடிகர் பாடகர் தயாரிப்பாளர் ஸ்கிரிப்ட் ரைட்டர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தொடர்ந்து சினிமாவில் தன்னை சுறுசுறுப்பாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்தியில் தேரோ இஸ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.
ஆனால் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கில் பெரிய வரவேற்பை பெற்ற குபேரா தமிழ்நாட்டில் பிளாப் ஆனது. இதையடுத்து தனது முன்னாள் மாமனார் ரஜினிகாந்த் பாணியில், நடிகர் தனுஷ் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். அதாவது நடிகர் ரஜினிகாந்த், வாய்ப்பு அமையும் போதெல்லாம் தனது ரசிகர்களை சந்திக்க நேரம் ஒதுக்குவார். தன்னுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவார்.
அதே போன்ற ஒரு முடிவுக்கு நடிகர் தனுஷ் இப்போது வந்துள்ளார். வாரந்தோறும் ஞாயிறு தினங்களில் 25 வாரங்களுக்கு தொடர்ந்து தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார். ஒவ்வொரு வாரமும் 500 ரசிகர்களை நேரில் வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவை 25 வாரங்களுக்கு ஞாயிறு தினங்களில் மட்டும் புக்கிங் செய்திருக்கிறார். வரும் 27ம் தேதி முதல் ஞாயிறு தினங்களில் இங்கு ரசிகர்களை தனுஷ் சந்திக்க உள்ளார்.





