போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அங்கிருந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கினார். இதில் நானும் ரவுடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது, நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனுக்கு காதல் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த, திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
இதனிடையே அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார். இதற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார். இந்த நிலையில் அவர் நீண்ட நாட்களாக கையில் வைத்திருந்த தனது எல் ஐ சி திரைப்படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதனுக்கு கூறினார்.
இந்தப் படத்தை முதலில் அவர் சிவகார்த்திகேயனை வைத்து எடுப்பதாகத் தான் இருந்தது. ஆனால் போதிய கால்ஷீட் கிடைக்காததால், அந்தக் கதை பிரதிப் ரங்கநாதனுக்கு சென்றது. இதில் கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
படத்தில் பிரதீப்புக்கு தந்தையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இதன் படப்பிடிப்பை விக்னேஷ் சிவன் நடத்தினார்.
இந்த நிலையில், எல் ஐ சி திரைப்படத்திற்கான டைட்டிலில் முதலில் இருந்தே பிரச்னை இருந்து வந்தது. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பதே இதன் விரிவாக்கம் என்றாலும், இது தங்கள் நிறுவனத்தை குறிப்பிடுவதாக சம்பந்தப்பட்ட எல்ஐசி நிறுவனம் கூறியது. டைட்டிலை மாற்றவில்லை என்றால் வழக்கு தொடர்வோம் என்று எச்சரித்தது. இதே போல் இயக்குனர் ஒருவரும் இந்த டைட்டிலுக்கு சொந்தம் கொண்டாடினார். இதன் காரணமாக படத்தின் பெயரை மாற்ற விக்னேஷ் சிவன் முடிவு செய்து இருக்கிறாராம். அதன்படி படத்திற்கு ப்ளூ ஸ்டோரி என பெயர் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





