இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவில் இசை சக்கரவர்த்தியாக 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார். அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடலின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இளையராஜா இதுவரை 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என எல்லா மொழிகளிலும் இசையால் ரசிகர்களை வசப்படுத்திய இளையராஜா இன்னும் தன் வசீகர இசையால் ரசிகர்களை மயக்கத்தில் வைத்திருக்கிறார்.
இசையை பொருத்த வரை இளையராஜாவுக்கு 3 தலைமுறைகளை கடந்தும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் மீதான விமர்சனங்கள் ஏராளமாக இருக்கின்றன. இளையராஜா உறவினர்கள், நண்பர்கள், நடிகர்கள், பாடகர்களுடன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அதை எல்லாம் கடந்து இசைஞானியாக எல்லோராலும் போற்றப்படும் ஒரு கலைஞராக மதிக்கப்படுகிறார். அதனால் அவரது வாழ்க்கை வரலாறு படமாகிறது.
இந்நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கவும், அதில் கதாநாயகனாக நடிப்பது தனுஷ் எனவும் முடிவானது. இளையராஜாவின் மிக தீவிர ரசிகரான தனுஷ் இதற்கு உடனே ஒத்துக்கொண்டார். இந்த படத்துக்காக தனுஷ் பெறுகிற சம்பளம் ரூ. 50 கோடி ரூபாய். இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண்மாதேஸ்வரன்தான் இயக்குகிறார்.
இந்த படத்தின் துவக்க விழா குறித்து நேற்றே தனுஷ், ஒரு பதிவை டிவீட் செய்திருந்தார். கிடாரின் பின்னணியில் காவிய பயணம் துவங்குகிறது என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த படத்தின் துவக்க விழா சிறப்பாக நடந்தது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக பங்கேற்றார். இளையராஜா, கங்கை அமரன், வெற்றிமாறன், தனுஷ், அருண் மாதேஸ்வரன், இயக்குனர் சங்க தலைவர் ஆர்வி உதயகுமார், சந்தானபாரதி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இதில் கலந்துக்கொண்டனர். இந்த படத்துக்கு இளையராஜாவே இசையமைக்கிறார் என்பதும் முக்கியமான தகவலாக உள்ளது.
இளையராஜாவின் இளமைக்கால வாழ்க்கை, ஆர்மோனியம் பெட்டியை மட்டுமே நம்பி சென்னைக்கு அவர் தன் தம்பி கங்கை அமரனுடன் வருகை தந்தது, சினிமாவில் அவரது ஆரம்ப கால முயற்சிகள், பிறகு சினிமாவில் அவர் நுழைந்த பிறகு சாதித்த சாதனைகள், அவரது வெற்றிகள், இலக்குகள், விருதுகள் என பலதரபட்ட விஷயங்களையும் இதில் கொண்டுவர இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது.





