கடந்தாண்டில் நடிகர் தனுஷ் நடித்த ராயன் படம் வெளியானது. இது அவர் நடித்த 50வது படம். இந்த படத்தை அவரே டைரக்ட் செய்திருந்தார். ராயன் மாஸ் ஹிட் படமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. தொடர்ந்து தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பிளாப் ஆனது.
இதைதத் தொடர்ந்து வருகிற 20ம் தேதி தனுஷ் ராஷ்மிகா மந்தனா நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்த குபேரா படம் வெளியாகிறது. இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகன் தனுஷ் பிச்சைக்காரனாக இருந்து திடீர் கோடீஸ்வரனாகி குபேரனாக மாறுவதுதான் படத்தின் கதை.
குபேரா படத்தில் நாயகியாக நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனா இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ராயன் படத்துக்கு பிறகு தனுஷ் நடிப்பில் ஓராண்டுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் குபேரா மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தனுஷ் நடிப்பில் உருவான இட்லி கடை படமும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் குபேரா படம் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இசை வெளியீட்டு விழாவிலும் தனுஷ், என்னை பற்றி என்ன வதந்தி பரப்பினாலும் ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது என பேசியது வைரலானது.
ஐதராபாத்தில் நடந்த குபேரா பிரமோ நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், குபேரா படப்பிடிப்பின் போது நடந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தனுஷ் பேசியதாவது, சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவங்களை கொடுத்தது.
அதே சமயம் கொஞ்சம் மோசமான அனுபவத்தையும் கொடுத்தது. எனக்கும் ராஷ்மிகாவுக்கும் குப்பைத் தொட்டியில் கிட்டத்தட்ட 6லிருந்து 7 மணி நேரம் வரை ஷூட் இருந்தது. குப்பை தொட்டிக்குள் கடும் நாற்றம் வீசியது. என்னால் தாங்க முடியலே. அப்போது நான் ராஷ்மிகாவிடம் என்ன இப்படி நாற்றம் அடிக்கிறது என்றேன். அதற்கு அவரோ, சார் எனக்கு எதுவுமே நாற்றம் அடிக்கவில்லையே என்றார். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.





