தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். நல்ல வெற்றிப் படங்களை கொடுத்த அவர் சில படங்களில் அவரே சொந்தக் குரலில் பாடினார். பிறகு வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்களை துவங்கி படங்களை தயாரிக்க ஆரம்பித்து தயாரிப்பாளராக மாறினார். தன்னுடைய படங்கள் மட்டுமின்றி பிற ஹீரோக்களின் படங்களையும் தயாரித்தார்.
நடிகர் பாடகர் தயாரிப்பாளர் அவதாரங்களை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் ப பாண்டி படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தனுஷ் மாறினார். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்து ராயன் படத்தை இயக்கினார். இது தனுஷ் நடித்த 50வது படம். ராயன் படம் கடந்தாண்டில் வெளியாக பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது.
அடுத்து தனுஷ் இயக்கத்தில் 3வது படமாக வெளியான படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியான இந்த படத்தின் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடித்திருந்தார். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து நடிகர் தனுஷ் இயக்கத்தில், நடிப்பில் இட்லி கடை படம் இன்னும் சில மாதங்கள் கழித்து வெளியாக உள்ளது.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது நடிகர் தனுஷ்தான் என்று ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. ஆனால் குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடிக்கும் படத்தை டைரக்ட் செய்யப் போவது ஆதிக் ரவிச்சந்திரன்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை அதன்பிறகு அஜீத்குமார் நடிக்கும் படத்தை நடிகர் தனுஷ் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷ், நடிகர் அஜீத்குமாரிடம் போனில் பேசி ஒரு லைன் கதை சொல்லி இருக்கிறார். மிகவும் கதை பிடித்துப் போக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்று அஜீத்குமார் சந்தோஷமாக தனுஷிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அதன்பிறகு தனுஷ் தனது படங்களில் பிஸியாகி விட்டார். அஜீத்குமாரும் கார் ரேஸ்களில் கலந்துக்கொண்டு பிஸியாகி விட்டார்.
இடையில் ஒருமுறை சென்னை வந்த அஜீத்குமார் தனுஷை சந்திக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், அப்போது தனுஷ் தாய்லாந்துக்கு ஷூட்டிங் சென்றுவிட்டார். குபேரா படம் வெளியான பிறகு நடிகர் அஜீத்குமார் துபாய் வர இருக்கிறார். அங்கு அவருக்கு சொந்தமான வீட்டில் அஜீத்குமார் சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளார். அங்கு நடிகர் அஜீத்குமார் தனுஷ் சந்திப்பு நடக்க உள்ளதாகவும், அங்கு தனது கதையின் முழு ஸ்கிரிப்ட்டையும் அஜீத்குமாரிடம் தனுஷ் சொல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





