நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தனது படங்களில் பாடல்களை பாடிய தனுஷ் நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து வொண்டர்ஃபார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரிக்கவும் செய்தார்.
நடிகர் பாடகர் தயாரிப்பாளர் ஆகியவற்றை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனராகவும் ஒரு கட்டத்தில் மாறிவிட்டார். ராஜ்கிரண் ரேவதி நடிப்பில் ப பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கி இயக்குனராகவும் வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்தாண்டில் தனுஷ் இயக்கத்தில் ராயன் படமும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.
அதன்பிறகு தனுஷ் தனது அக்கா மகன் பவிஷ் என்பவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இயக்கிய படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பலத்த பிளாப் ஆனது. இதையடுத்து தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை என்ற படம் தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் கடந்த 20ம் தேதி வெளியானது. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ள இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
குபேரா படத்தில் பிச்சைக்காரனாக நடிகர் தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாக ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ஆடுகளம் அசுரன் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் தனுஷ், சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றிருக்கிறார். அதே போல் அவர் தயாரித்த காக்கா முட்டை விசாரணை ஆகிய படங்களும் அவருக்கு தயாரிப்பாளர் என்ற முறையில் தேசிய விருதை பெற்றுத் தந்திருக்கின்றன.
அதனால் குபேரா படத்தில் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் தனுஷூக்கு தேசிய விருது மீண்டும் கிடைக்குமா என்ற விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆடுகளம் அசுரன் படங்களில் தனுஷ் நடிப்பு மெருகேற்றப்பட்டதாக இருந்தது. ஆனால் குபேரா படத்தில் அவரது நடிப்பு பல காட்சிகளில் ஒட்டவே இல்லை. கொஞ்சம் மிகையானதாகவே இருந்தது. அதனால், குபேரா படத்துக்கு எல்லாம் தேசிய விருதுக்கு வாய்ப்பில்ல ராஜா என சீமான் பாணியில் நடிகர் தனுஷை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.





