நடிகர்கள் சரத்குமார் அசோக் செல்வன் இணைந்து நடித்த போர்த்தொழில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான படம் கர. நாளை 30ம் தேதி கர படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆனாலும் தனுஷ் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் கவலையில் இருந்து வருகின்றனர். அதற்கு காரணம் கர படத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு தான். ஏற்கனவே கர என்ற இந்த டைட்டில் பெயரை பதிவு செய்து விட்டதாகவும் எனவே படத்தை வேறு பெயரில் வெளியீடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுதாரர் தெரிவித்த நிலையில், படம் நாளை உறுதியாக வெளிவருமா என்பதில் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கர படத்தில் மமீதா பைஜூ கே எஸ் ரவிக்குமார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கர படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் நடிகர் தனுஷ் இதில் வங்கிகளில் திருடும் ஒரு கொள்ளையனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இதுபோன்ற ஒரு கேரக்டரில் தனுஷ் நடித்தது இல்லை.
நடிகர் தனுஷ் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த படம் ராயன். இந்த படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்த தமிழ் படங்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறாத நிலையில், கர படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஏனெனில் குபேரா இட்லி கடை போன்ற படங்கள் சரியாக போகவில்லை. அவர் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை.
அதனால் கர படம் ரிலீஸ்க்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியை பெறும் என்று தனுஷ் ரசிகர்கள் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் கர படத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் படம் நாளை அறிவித்தபடி வெளியாகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு தரப்பு ரசிகர்கள் படம் வெளியாகுமா என்ற சந்தேகத்தில் டிக்கெட் முன்பதிவில் ஆர்வம் காட்டாததால் டிக்கெட் விற்பனை படக்குழு எதிர்பாத்த அளவுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில், நாளை முதல் அதாவது ஏப்ரல் 30ம் தேதி கர படம் வெளியாகும் என்று உறுதியாக பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு புக்கிங் செய்து வருகின்றனர்.





