மதுரையை சேர்ந்த தமிழ்த்துறை பேராசிரியர் கு ஞானசம்பந்தன், பல பட்டிமன்றங்களில் இலக்கிய மன்றங்களில் தொடர்ந்து பேசி வருகிறார். நகைச்சுவை கலந்த இவரது இலக்கியம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் என்பதால், விருமாண்டி படத்தில் சில காட்சிகளில் கு ஞானசம்பந்தனை கமல் தன்னுடன் நடிக்க வைத்தார்.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற்ற கு ஞானசம்பந்தன் தமிழ் இலக்கிய பணிகளுடன், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் அவ்வப்போது சினிமாவில் நடித்து வருகிறார். பெரும்பாலும் ஹீரோ, ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கிறார். அல்லது அரசு அதிகாரி, நீதிபதி போன்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
ரஜினி முருகன், சிவா மனசுல சக்தி, கொம்பன், போராளி, குட்டிப்புலி, பிரம்மன், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், மருது, சண்டக்கோழி 2, பிகில், நாடோடிகள் 2 என பல படங்களில் கு ஞானசம்பந்தன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. விஜயுடன் பிகில் படத்தில், நயன்தாராவின் அப்பா கேரக்டரில் கு ஞானசம்பந்தன் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கு ஞானசம்பந்தன் கூறியதாவது, நடிகர் விஜயுடன் எனக்கு பழக்கமில்லாத நிலையில் பிகில் படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. முதல் காட்சியே ஒரு திருமண மண்டபத்தில் 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுடன் விஜயுடன் பேசி நடிப்பது போன்ற காட்சி. மனசுக்குள் கொஞ்சம் பயமாக தான் இருந்தது.
ஆனால் விஜய் மிகவும் ஜாலியாக பேசி நடித்தார். அந்த ஷாட் முடிந்த பிறகு என்னிடம் அருகில் சேர் போட்டு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். நான் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் இலக்கிய சொற்பொழிவுக்காக செல்ல வேண்டியவன். ஆனால் அமெரிக்கா செல்லும் நிகழ்ச்சியை, விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு பிகில் படத்தில் விஜயுடன் நடிக்க ஆசைப்பட்டு அவருடன் நடித்தேன். இது எப்படியோ விஜய்க்கு தெரிந்திருக்கிறது.
அப்போது விஜய், நயன்தாராவை பார்ப்பதற்காக என் மனைவி, பிள்ளைகளையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த என் மனைவியிடம் விஜய், பாருங்கம்மா, அமெரிக்காவுக்கு தமிழ் பேச கூப்பிட்டா போக வேண்டியதுதானே, அதை கேன்சல் பண்ணிட்டு உங்க வீட்டுக்காரர் நயன்தாரா கையை பிடிச்சிட்டு இருக்காரு பாருங்க, என்று கூறி கலாட்டா செய்துவிட்டார். ரொம்பவும் ஜாலியாக என்னிடம் நடந்துக்கொண்டார் என்று கு ஞானசம்பந்தன் கூறியிருக்கிறார்.





