யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. இவரது முழுப் பெயர் ஜி பேச்சிமுத்து. அதை சுருக்கி ஜிபி முத்து என வைத்துக்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் உடையான்குடியை சேர்ந்த இவர் ரீல்ஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பேசும் செத்தப் பயலே நாறப் பயலே டயலாக் இணையத்தில் மிகவும் இவரை பிரபலப்படுத்தியது.
ஜிபி முத்து பல பாடல்களுக்கு அவரது நடனமாடி வாயசைத்து பாட்டு பாடி மக்கள் மத்தியில் டிரண்டிங் ஆனவர். பேப்பர் ஐடி என்ற பெயரில் இவரை கலாய்க்கும் சிலரை இவர் வீடியோ போட்டு சகட்டு மேனிக்கு திட்டுவார். இவர் தூத்துக்குடி வட்டார மொழியில் திட்டுவது பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வைரலானது. அதனால் ஜிபி முத்துவுக்கு பெரிய புகழ் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஜிபி முத்து முதல் போட்டியாளராக வீட்டுக்குள் சென்றார். மற்ற போட்டியாளர்கள் நாளைக்கு தான் வருவாங்க. இன்னிக்கு நைட் நீங்க மட்டும்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கணும் என்று தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் அவரை கலாய்த்தார். அய்யோ சாமி, என்னை விட்டுடுங்க இப்பவே நான் ஊருக்கு போறேன் என அழாத குறையாத ஜிபி முத்து பதறி விட்டார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் 2 வாரங்கள் மட்டுமே இருந்த ஜிபி முத்து, பிறகு என்னால் என் குடும்பத்தை பிள்ளைகளை விட்டு இங்கு இருக்க முடியவில்லை என்று வெளியேறிவிட்டார். தொடர்ந்து ஜிபி முத்து ஓ மை கோஸ்ட் துணிவு பம்பர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்து வர உள்ள வள்ளிமயில் என்ற படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ஜிபிமுத்து தன் மனைவியுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், உடன்குடி பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்ற தெருவையே காணவில்லை. என் வீடு அந்த தெரு வழியாக தான் உள்ளது. அந்த தெருவையே செல்ல வழியில்லாமல் அடைத்து விட்டனர். மேலும் அங்கு இருக்கிற உச்சி மாரியம்மன் பட்டரை மாரியம்மன் கோவில் நிலத்தை 6 பேர் கள்ளப் பத்திரம் தயார் செய்து முறைகேடாக விற்பனை செய்துள்ளனர்.
கோவில் இடத்தை விற்க யாருக்கும் உரிமை கிடையாது. அதை நான் கேட்டதால் பிரச்னை செய்கின்றனர். எங்கள் தெருவில் பாதை இருந்ததற்கான என்னிடம் அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. தனிநபர் ஒருவர் இந்த விஷயத்தில் ரொம்பவும் என்னிடம் அராஜகம் செய்கிறார். அதனால் பேமிலியுடன் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தேன். இது தொடர்ந்தால் அடுத்து மண்ணெண்ணெயுடன் வருவேன். இங்கு வந்து தீக்குளிப்பேன். அந்த நிலைதான் எனக்கு ஏற்படும் என ஜிபிமுத்து கூறியிருக்கிறார்.





