இங்கு முக்கிய நடிகர்களுக்கு அவர்களின் 25 மற்றும் 50 வது திரைப்படம் எப்போதுமே கை கொடுத்ததில்லை என்ற ஒரு கூற்று தமிழ் சினிமாவில் உண்டு. இதற்கு விதிவிலக்காக அமைந்தவர் அஜித் குமார். அவரது 25வது திரைப்படமான அமர்க்களம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.
இதேபோல் ஐம்பதாவது திரைப்படமான மங்காத்தாவை பற்றி இங்கு நாம் கூற வேண்டியது இல்லை. நொடிக்கு நொடி காத்திருந்து திருப்பம் மற்றும் நேர்த்தியான திரைக்கதை, இறுதிக் காட்சி ட்விஸ்ட் என அஜித் ரசிகர்களுக்கு அந்தத் திரைப்படத்தின் மூலம் செம விருந்தளித்தார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் அஜித்தின் வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் சேர்ந்திருக்கிறார்.
அவரது ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா பெரும் வெற்றியைப் பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தை நித்திலன் சாமிநாதன் என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்பாக குரங்கு பொம்மை என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார். 2017 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது.
பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ஆனால் திரையரங்கில் சென்று அந்த திரைப்படத்தை பார்க்கத்தான் யாரும் விரும்பவில்லை. இதனால் தோல்வி படங்களின் வரிசையில் அது சேர்ந்தது. இருப்பினும் குரங்கு பொம்மை படத்தை எடுத்தவர், விஜய் சேதுபதியுடன் கை கொடுத்ததால் படத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது.
அதனை முழுமையாக பூர்த்தி செய்து இருக்கிறார் இயக்குனர். நான்லீனியர் பாணியில் அவர் கதை கூறிய விதம் இங்குள்ள ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால், படம் திரையரங்குகளில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. இதில், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நட்டி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் மகாராஜா படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜ் குழுவினர் சமைத்த விருந்தில் உள்ள பட்டியல் மணம் மணக்க வைத்திருக்கிறது. மதுரை ஸ்பெஷல் கோலா உருண்டை, பிச்சுப் போட்ட கோழி வறுவல் வஞ்சிரம் மீன் வறுவல், குடல் வறுவல், மாதம்பட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, மட்டன் எலும்பு குழம்பு, பெப்பர் கார்லிக் ரசம், பனங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா, பிரட் மால்புவா என விருந்தில் அசத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவும் நடைபெற்றது.





