மனித வாழ்க்கையில் திருமணம் என்பது குடும்ப வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகிறது. இது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமின்றி, கோடி கோடியாக நடித்து குவிக்கும் சினிமா கலைஞர்களுக்கும் பொருந்தும். ஆனால் ஒரு சிலர், முரட்டு சிங்கிளாக வாழ்ந்து விடுவது என்ற ஒரு துணிச்சலான முடிவையும் எடுத்து விடுகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல நட்சத்திர ஜோடிகள், திருமணமான சில ஆண்டுகளில் அல்லது பல ஆண்டுகளுக்கு பிறகு தங்களது திருமண முறிவை அறிவித்திருக்கின்றனர். அதுவும் அவர்கள் காதல் தம்பதியராக இருப்பதுதான் இதில் பெரிய அதிசயமாக இருக்கிறது. அதில் மிக முக்கியமாக நளினி ராமராஜன், பார்த்திபன் சீதா, பிரகாஷ் ராஜ் – லலிதா குமாரி போன்றவர்களை சொல்லலாம்.
அதே வரிசையில் சமந்தா – நாக சைதன்யா காதல் மணம் புரிந்து 4 ஆண்டுகளில் பிரிந்து விட்டனர். இப்போது தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துவிட்டு, தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். அதே போல், பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவி நட்சத்திர ஜோடி தங்களது பிரிவை, மண முறிவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி வெளிச்சத்துக்கே வராமல் பல நட்சத்திர தம்பதியரும் உண்டு. இப்போது சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இதுபோன்ற விவாகரத்து விவகாரங்கள் அடிக்கடி வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் – வாணி கணபதி, கமல்ஹாசன் – சரிகா, ராதிகா – பிரதாப் போத்தன், சரத்குமார் – சாயா தேவி என பல மண முறிவுகள் பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகளாக வெளிவந்திருக்கின்றன.
இப்படி நட்சத்திர தம்பதியரின் மண முறிவுக்கு முக்கிய காரணங்களாக இருப்பது முதலில் அவர்களுக்கு இருக்கும் பிற நபர்களுடன் நெருங்கிய தொடர்புதான். கணவரை விட்டுவிட்டு மனைவியும், மனைவியை விட்டு விட்டு கணவரும் தன்னுடன் நெருக்கமாக நடிக்கும் நடிகர் அல்லது நடிகையுடன் அந்தரங்க தொடர்புகளை அதிகரிப்பதுதான்.
தவிர, இருவருமே லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களாக இருக்கும் பட்சத்தில், ஈகோ அவர்களுக்குள் பிரதானமாகி விடுகிறது. வளரத் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் வந்த வாழ்க்கை துணையை, பெரிய அளவில் வளர்ந்த பிறகும், ஏற்றுக் கொள்வதில் மன ரீதியான மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக பல பெண்களுடன், பல ஆண்களுடன் கலைஞர்களுக்கு ஏற்படும் தொடர்பு, நெருக்கமும்தான், இதுபோன்ற மண முறிவுகளுக்கு பிரதான காரணமாகி விடுகிறது.





