துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தொடங்கி சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் வரை தனுஷ் தொட்டிருக்கும் உயரங்கள் ஏராளம். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் படங்களிலும் பட்டையை கிளப்பி இருந்தாலும் தற்போது ஐம்பதாவது படத்தை நெருங்கி இருக்கிறார்.
இந்தப் பயணத்தில் காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தனுஷ் கொடுத்துள்ளார். இதில், பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் தனுஷை தூக்கி வைத்துக் கொண்டாட காரணமாக அமைந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி.
அனிருத்தின் தெறிக்கும் இசையில் வெளியான இந்த திரைப்படம், தனுஷிற்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்தது. நடிகரின் 25வது திரைப்படமாக வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, தனுஷ் பலராலும் பேசப்பட்டார். குறிப்பாக இந்த படத்தில் அம்மா மகன் சென்டிமென்ட் சரியாக ஒர்க் அவுட் ஆனது. அம்மா அம்மா பாடலும் ஹிட் அடிக்க, அதில் நடித்த சரண்யா பொன்வண்ணன் கோலிவுட்டில் கொண்டாடப்பட்டார். இந்த படம் குறித்து பேசிய அவர்,
“வேலையில்லா பட்டதாரி படத்தின் கதையை கூறும்போது, எனக்கு செல்போனில் தொடர்பு கொண்ட தனுஷ், உங்கள் வீட்டிற்கே வந்து கதை கூறுகிறேன். எனக்கு ஏதாவது சமைத்து போடுங்கள் என்று கேட்டார். வீட்டில் சாப்பிட்டுவிட்டு, பயங்கரமாக கதை சொல்லி, தனியாக எனக்கென்று ஒரு பாடல் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் எனக்கு படப்பிடிப்பு தளத்தில், இதெல்லாம் ஒரு படமா என்றுதான் நினைத்தேன். அப்போது ஏன் எனக்கு அப்படி தோன்றியது என்று சத்தியமாக எனக்கு புரியவே இல்லை.
சும்மா இருங்க தனுஷ். இந்தப் படத்திற்கு நீங்கள் என்னை அழைத்திருக்கவே கூடாது. பெருசா வீட்டில் வேறு வந்து கதை கூறினீர்கள் என்று பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்கு தனுஷ், மேடம் பொறுமையாக இருங்கள். படம் ரிலீஸ் ஆன பிறகு பாருங்கள் என்று கூறிக் கொண்டே இருப்பார். ஆனால் டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் போது, ஓ இந்த சீன்களை எல்லாம் நான் நடித்தேனா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
இதெல்லாம் அவர் எப்படி எடுத்து இருந்தார் என்று எனக்கு தெரியவில்லை. அப்படியானால் அவர் எவ்வளவு சுதந்திரமாக அந்த படப்பிடிப்பு தளத்தில் எங்களை இயங்க விட்டிருப்பார் என்று நீங்களே பாருங்கள். இப்போது வரை நான் இந்த படத்தில் நடித்ததாகவே எனக்கு தெரியவில்லை” என்று பேசியுள்ளார். நடிகையின் இந்த பேச்சு தொடர்பான வீடியோவை, தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





