தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடிப்புத்துறையிலும், இயக்குநர்கள் படங்களை இயக்குவதிலும், இசையமைப்பாளர்கள் இசையமைப்பதிலும் மட்டுமே தங்களது முழு கவனத்தை செலுத்துவதில்லை. சினிமா துறையில் இருக்கும் பல பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தங்களது திறமையை வெளிப்படுத்தி, தங்களது இருப்பை இன்னும் உறுதிப்படுத்தி, பலப்படுத்திக் கொள்கின்றனர். இது மிகப்பெரிய புத்திசாலித்தனமும் கூட.
குறிப்பாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்போது பல படங்களுக்கு பாடல் எழுதி கவிஞராக மாறிவிட்டார். கமல்ஹாசனுக்கு நடிப்பு மட்டுமின்றி, சினிமாத்துறையில் அனைத்து விஷயங்களும் அத்துப்படி. டைரக்டர், பாடகர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், தொழில்நுட்ப கலைஞர் என எல்லாவற்றிலும் அவர் கிங் என்பதை மறுக்க முடியாது. இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஒரு சிறந்த நடிகராக வலம் வருகிறார்.
அந்த வரிசையில், இளம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், படங்களுக்கு இசையமைப்பதோடு தன் ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாமல், படங்களில் நடிக்கத் துவங்கினார். அவரது சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. சில தினங்களுக்கு முன், ஜிவி பிரகாஷ் நடிக்கும் 25வது படமான கிங்ஸ்டன் என்ற புதிய படத்தின் துவக்க விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று, படப்பிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
எனக்கு இன்னொரு பேர் இருக்கு, திரிஷா இல்லைனா நயன்தாரா, ஐங்கரன், குப்பத்து ராஜா, நாச்சியார், செம, ஜெயில், வணக்கம்டா மாப்பிள்ளை, செல்பி போன்ற படங்களில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பு சிறப்பாக இருந்ததால், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இப்போது, 25வது படத்தில் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, இந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஜிவி பிரகாஷ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், இந்த வெப்சீரிஸ்சை தயாரிக்கிறது. இந்த வெப் சீரிஸ்சை இயக்கப் போவது பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இவர் வெற லெவல் டைரக்டர். இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக கலக்கியவர் இவர்தான்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், தமிழில் 25வது படத்தில் நடித்து வருகிறார். இப்போது, அனுராக் காஷ்யப் என்ற பெரிய இந்திப்பட டைரக்டரின் இயக்கத்தில் இந்தி வெப் சீரிஸ்சில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது, தமிழ் சினிமாவினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் ஜிவி பிரகாஷ் சம்பளம் மட்டுமே ரூ. 6 கோடியாம். சுக்கிர திசை என்பார்களே, அது இதுதான் போல் இருக்கிறது.





