நடிகர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர் ஜெய். தொடர்ந்து எங்கேயும் எப்போதும் சுப்ரமணியபுரம் கலகலப்பு 2 ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தவெகவுக்கு ஆதரவாக ஜெய் பேசினார். மேலும் முதல்வராக விஜய் பங்கேற்ற விழாவிலும் மேடையில் காணப்பட்டார்.
நடிகர் ஜெய் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடித்த படம் சட்டென்று மாறுது வானிலை. வரும் 15ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உதவியாளர் பாபு விஜய் இந்த படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். சென்னையில் நடந்த இந்த படத்தின் விழாவில் படத்தின் நாயகன் ஜெய் பேசியதாவது, நான் பல இயக்குனர்களின் படங்களில் நடித்து விட்டேன்.
பல இயக்குனர்களை பார்த்து வியந்து இருக்கிறேன். என்னிடம் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டால் ஏஆர் முருகதாஸ் பெயரை சொல்வேன். அவர் தயாரித்த எங்கேயும் எப்போதும் ராஜா ராணி ஆகிய படங்களில் நான் நடித்திருக்கிறேன். அப்போது அவர் சொன்ன ஒரு அட்வைஸ்சை இன்றும் கடைபிடிக்கிறேன். அது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.
அந்த படப்பிடிப்பு சமயத்தில் என்னிடம் பேசிய ஏஆர் முருகதாஸ், உங்களுக்கு மறுநாள் படப்பிடிப்பு இருக்கிறது என்றால் இரவில் சீக்கிரம் தூங்கி விடுங்கள். நீங்கள் சரியாக தூங்காவிட்டால் மறுநாள் உங்கள் கண்ணில் கருவளையம் வரும். முகம் டல்லாக தெரியும். அதற்கு நிறைய மேக்கப் போட வேண்டும். அதற்கேற்ப லைட்டிங் செட் பண்ண வேண்டும்.
நீங்கள் இரவில் சரியாக தூங்கிவிட்டால் இந்த பிரச்சனைகள் வராது என்றார். இதை நான் புரிந்து கொண்டு படப்பிடிப்பு நாளை என்றால் சரியான நேரத்துக்கு இரவில் தூங்கி விடுகிறேன். இந்த படத்தின் இயக்குனர் என்னிடம் கதை சொல்ல வந்த போது நான் முருகதாஸின் உதவியாளர் என்றார். உடனே படம் பண்ண சம்மதித்து விட்டேன். இந்த படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமானது என்று ஜெய் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேச ஆரம்பித்த நடிகர் ஜெய் தமிழக முதல்வர் விஜய் பாணியில், என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து விட்டு, ரொம்ப நாளாக இப்படி பேச ஆசை என்றார். இந்த படத்தில் விஜய் ரசிகராக வருகிறேன். அதனால் அவரது பாடி லாங்குவேஜ் இருக்கும். இடைவேளைக்குப் பிறகு கதை மாறிவிடும் என்றும் நடிகர் ஜெய் இந்த படம் குறித்து கூடுதல் தகவலையும் கூறியிருக்கிறார்.





