தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி, தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், போகன். தனி ஒருவன், வனமகன், அடங்கமறு, பேராண்மை உள்ளிட்ட படபடங்களில் நடித்தார்.
சமீபத்தில் அவர் நடித்த அகிலன், இறைவன், சைரன் 108 உள்ளிட்ட சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனினும் வருகிற தீபாவளிக்கு அவர் நடித்த பிரதர் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பூமிகா அக்காவாகவும் ஜெயம்ரவி தம்பியாகவும் நடித்திருக்கிறார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய டைரக்டர் எம் ராஜேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து தொடர்ந்து 2 படங்களில் நடிக்க ஜெயம் ரவி கமிட் ஆகி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக நித்யாமேனன் நடித்திருக்கிறார். இந்த படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.
இதற்கிடையே தனது சொந்த குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தியை நிரந்தரமாக பிரிய விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார். மேலும் சென்னையில் வசிக்க விரும்பாமல் சென்னையில் இருந்து மும்பையில் குடியேறி இருக்கிறார் ஜெயம் ரவி.
வருகிற தீபாவளி பண்டிகைக்கு பிரதர் படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் ஜெயம் ரவி பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இதற்காக நேர்காணல் பங்கேற்ற ஜெயம் ரவி கூறுகையில், பிரதர் படம் என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மிகவும் பொருந்தி போகிற ஒரு படமாக இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை ஞாபகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
என் அக்காவுக்கு சிறு வயது முதல் ஒரு பழக்கம் இருக்கிறது. அவர் மனதில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், யாரேனும் அவரிடம் மனம் நோகும்படி பேசிவிட்டால் அதைப் பிறகு லெட்டராக எழுதிக் கொடுப்பார். அதை படிக்கும் போதுதான் நான் தவறு செய்து விட்டேன் என்று எனக்கு தோன்றும். என் சினிமா வாழ்க்கை பற்றி மற்றவர்கள் கூறும் கருத்தைக் கேட்டுக் கொண்டு அதன்படி நடப்பேன். ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மற்றவர்கள் பேசுவதை பெரிதாக நான் கண்டுகொள்ள மாட்டேன் என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.





