மலையாள படவுலகில் மெகா ஸ்டார் நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் மம்முட்டி, பிருத்விராஜ், ஜெயராம். இவர்கள் மூன்று பேருமே தமிழ் சினிமாவில் நடித்தவர்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள். தமிழில் பல படங்களில் இவர்கள் நடித்துள்ளனர்.
தளபதி, மறுமலர்ச்சி, மக்கள் ஆட்சி, ஆனந்தம், பேரன்பு, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், கார்மேகம், மௌனம் சம்மதம், வாசுகி போன்ற பல படங்களில் மம்முட்டி நடித்திருந்தார். கனா கண்டேன், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன், சத்தம் போடாதே, அபியும் நானும் போன்ற பல படங்களில் நடித்தவர் பிருத்விராஜ்.
ஜெயராம், மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் அவர் நடித்த படங்கள் அதிகம். கோகுலம், பஞ்சதந்திரம், பிரிவோம் சந்திப்போம், ஏகன், துப்பாக்கி, பொன்னியின் செல்வன், பிரியங்கா, நிலா, கோலங்கள், முறை மாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் ஜெயராம் நடித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா நடிகர்களை போல மம்முட்டி, பிருத்விராஜ், ஜெயராம் போன்றவர்கள் கமர்ஷியல் ஹீரோக்களாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிப்பார்கள். மலையாள படவுலகை பொருத்தவரை கதைதான் படத்தின் ஆணிவேர். ஹீரோயிசம் எல்லாம் அதில் ஊறுகாய் போலவே இருக்கும். அப்படிப்பட்ட இவர்கள் சமீபத்தில் செய்த செயல், ஹீரோயிசத்தை காட்டிலும் மேலானதாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்று வருகிறது.
கேரளாவில், தொடுபுழா அருகில் உள்ள வெள்ளியமூட்டம் என்ற பகுதியில் மேத்யூ பென்னி என்ற 15 வயது சிறுவன், 20 பசுமாடுகளை வளர்த்த நிலையில், சமீபத்தில் விஷத்தன்மை நிறைந்த செடிகளை சாப்பிட்ட 13 பசுக்கள் அதில் இறந்துவிட்டன. தந்தையை இழந்த அந்த குடும்பத்துக்கு பசுக்களே வாழ்வாதாரமாக இருந்துள்ளன.
இதுகுறித்து தகவலறிந்த நடிகர் ஜெயராம், அந்த சிறுவன் மேத்யூ பென்னி வீட்டுக்கே சென்று, பசுக்களை இழந்த அந்த குடும்பத்துக்கு உதவம் விதமாக 5 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இதற்கு முன்பே நடிகர் மம்முட்டி ஒரு லட்சம் ரூபாயும், நடிகர் பிருத்வி ராஜ் ரூ. 2 லட்சம் அந்த குடும்பத்துக்கு வழங்கியுள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இதே போல் என்னுடைய 22 பசுக்கள் இறந்தன. அதனால் அந்த இழப்பின் வேதனையும், வலியும் எனக்கு தெரியும், என்று கூறியுள்ளார் நடிகர் ஜெயராம்.





