நடிகர் மோகன், கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர். அவர் படங்கள் என்றாலே, ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அந்த காலகட்டத்தில் இந்தி, மலையாளத்தில் கமல் கவனம் செலுத்தியதால், அதிகமான காதல் படங்களில் நடித்து இளம்பெண்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் மோகன்.
பெங்களூருவைச் சேர்ந்த மோகனுக்கு இன்று வரை தமிழ் பேச தெரியாது என்றே கூறப்படுகிறது. ஆனால் அவரது படங்களில் அவர் பேசும் தமிழை கேட்டால், அந்த கொஞ்சுகிற குரலில் அந்த தமிழ் தேனாக இனிக்கும். அந்த குரலுக்கு சொந்தக்காரர், நடிகர் விஜயின் சொந்த தாய்மாமா பாடகர் எஸ்.என் சுரேந்தர்தான்.
நடிகர் மோகன் தனது படங்களில் பெரும்பாலும் பாடகராக தான் வருவார். ஏனெனில் இளையராஜா இசையில் அதிக பாடல்களை கொண்ட படங்களில் அவர் நடித்ததால், அந்த கேரக்டர் அவருக்கு அதிகமாக கிடைத்தது. மைக் பிடித்து பாடல் காட்சிகளில் அதிகமாக தோன்றியதால் மைக் மோகன் என்ற பெயர் பெற்றார்.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஒதுங்கி இருந்த மைக் மோகன், மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 68 படத்தில், மைக் மோகன்தான் வில்லன் கேரக்டரில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மிக அழகான சிரிப்பில் ரசிகர்களின் மனதை மயக்குகிற ஒரு மென்மையான ஹீரோவை, வில்லனாக்கி நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
இதேபோல், குழந்தை முகத்தில் பார்த்தவுடன் மனதை சந்தோஷப்படுத்துகிற ஒரு மென்மையான நடிகரை அடுத்த கொடூர வில்லனாக காட்ட தயாராகி வருகிறார் மிஷ்கின். விஜய்சேதுபதி நடிக்கும் ட்ரெயின் என்ற ரன்னிங் டைட்டில் படத்தை இயக்கி வரும் மிஸ்கின், தனது படத்தில் பார்த்தாலே பயமுறுத்தும் ஒரு கொடூர வில்லன் கேரக்டரில் ஜெயராமை நடிக்க வைக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர்களை அதுவரை நடிக்காத வித்யாசமான கேரக்டர்களில் நடிக்க வைப்பது மிகச்சிறந்த யுக்தி தான். அந்த வகையில், நடனக்கலைஞரான சாண்டி மாஸ்டர், லியோ படத்தில் சைக்கோ வில்லனாக காட்டப்பட்டார். ரஜினி 171 படத்தில், வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். விஜய் 68 படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார். அந்த வரிசையில் மென்மையான, காமெடித்தனமான நடிப்பில் அசத்தும் ஜெயராமும் இணைந்து விட்டார்.





