ஜெயராம் ஊர்வசி நடித்த பரிமளா அண்ட் கோ படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தின் பிரமோசனுக்காக ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ஜெயராம் கூறியதாவது, என் பையன் காளிதாஸ் பள்ளியில் படித்த போது நேஷனல் அவார்டு அவனுக்கு கிடைத்தது. அதை வாங்குவதற்காக நான் என் மனைவி என் மகன் எல்லாம் அந்த விழாவுக்கு சென்றிருந்தோம்.
அந்த விழாவுக்கு முந்தைய நாளே ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்கும் அந்த அரசு விழாவில் எப்படி மேடைக்கு வர வேண்டும், எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ரிகர்சலும் அங்கு நடந்தது. அதில் என் மகனுக்கும் ரிகர்சலில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி தரப்பட்டது.
விழா மேடைக்கு மெதுவாக அமைதியாக நடந்து வர வேண்டும். ஜனாதிபதியிடம் பணிவாக விருது வாங்க வேண்டும். கை குலுக்க கூடாது. நன்றி சொல்லிவிட்டு அப்படியே அதே வழியாக நடந்து மேடையை விட்டு இறங்கி விட வேண்டும் என்று ரிகர்சலின் போது சொல்லி தந்தனர். அதே மாதிரி அடுத்த நாள் விழாவிலும் நடந்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் விழா நடந்த போது விருது வாங்க எங்கள் மகன் ஜெயராம் மேடைக்கு சென்றான். ஜனாதிபதியிடம் விருதை வாங்கினான். ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து விருதை வழங்கியவுடன் அதை அருகில் நின்றிருந்த 7 அடி உயர பாதுகாப்பு அதிகாரியிடம் சேட்டா இதை கொஞ்சம் பிடிங்க என்று சொல்லி கொடுத்து விட்டான்.
அப்போது அவன் சட்டைக்குள் மார்பு பகுதியில் ஒரு பாக்கெட் உள்ளது. அதில் சின்ன ஆட்டோகிராப் நோட் பேனாவை மறைத்து வைத்து எடுத்துச் சென்றிருக்கிறான். எங்களுக்கே அது தெரியாது. ஒரு நிமிடம் என்று சொல்லிக்கொண்டு சட்டையின் 2 பட்டன்களை திறந்துவிட்டு உள் பாக்கெட்டுக்குள் கைவிட்டு அதை எடுக்கிறான். பார்த்துக்கொண்டிருந்த நாங்கள் எல்லாம் பதறி போய்விட்டோம்.
ஜனாதிபதி அருகில் நின்றுக்கொண்டு என்னவோ செய்கிறானே என பயந்து போய் பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்புறம் ஆட்டோகிராப் நோட்டை எடுத்து கலாமிடம் நீட்டி ஆட்டோகிராப் வாங்கினான். அவனிடம், கலாம் சார் எங்கே படிக்கிறாய் என்று கேட்டவுடன் பத்ம சேஷாத்திரி என்று கூறியவுடன் அவரும் சகஜமாக அவனுடன் பேச ஆரம்பித்து விட்டார். 3 நிமிடங்கள் மேடையில் அவருடன் பேசிவிட்டுதான் கீழே இறங்கி வந்தான் என்று நடிகர் ஜெயராம் அந்த நேர்காணலில் மகிழ்ச்சியாக கூறினார்.





