இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004ம் ஆண்டில் வெளியான படம் காதல். பரத் கதாநாயகனாகவும் சந்தியா கதாநாயகியாகவும் நடித்த இந்த படத்தில் காமெடி கேரக்டரில் பரத்தின் நண்பராக சுகுமார் ஸ்டீபன் என்ற பெயரில் நடித்திருந்தார். இந்த படம் சுகுமாருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. அதனால் இன்றும் காதல் சுகுமார் என்றே அவர் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் நடிகர்கள் கமல்ஹாசன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் உள்பட பலரும் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காமெடி நடிகர் காதல் சுகுமார், ரோபோ சங்கரின் மறைவு குறித்து தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, மதுரையில் ஒரே கலைக்குழுவில் நானும் அவரும் அறிமுகம் ஆனோம். சம காலத்தில் சென்னைக்கு கனவுலகத்தை தேடி ஓடி வந்தோம். கடந்த 1997ம் ஆண்டுகளில் 200 ரூபாய்க்காக ‘மிஸ்டர் மதுரை’ சங்கர் சினிமா வாய்ப்பு வேண்டும் என மேடையில் ஆடுவார்.
அப்படி அவர் ஆடும் போது யாராவது இயக்குனர் கண்ணில் பட்டுவிட வேண்டும் என உடல் முழுக்க சில்வர் பெயிண்ட் அடித்துக் கொண்டு சங்கர் கட்டுமஸ்தான தனது உடலைக் காட்டி ரோபோ நடனம் ஆடுவார். அதுவே அவருக்கு ரோபோ சங்கர் என்ற பெயராக அடையாளம் கிடைத்தது. ரோபோ சங்கர் இயல்பில் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். பல குரல் மன்னன்.
சினிமா அவரது திறமைக்கு வாய்ப்பு அளித்தது. உலகநாயகன் கமல்ஹாசனை அவரைப்போல் ஒரு சக நடிகன் காதலிக்கவில்லை என்றே சொல்லலாம். அவரால் சிரித்தவர்களை எல்லாம் இன்று அழ வைத்துவிட்டு அவசரப்பட்டு சென்று விட்டார். அன்பர்களே அவர் விட்டுச் சென்ற செய்தி ஒன்றுதான். எனக்கும் நமக்கும். உடல் தான் நமக்கு எல்லாமே. அதை விட்டு விட்டால் நம் உயிர் நம்மை விட்டு விடும். குடி உயிரைக் குடிக்கும்.
சமீபத்தில் டி ராஜேந்தர் அண்ணன் என்னையும் அவரையும் வைத்து காதல் கலாட்டா என்னும் படத்தை இயக்க எங்களிடம் கதை சொன்னார். அப்போது ரோபோ சங்கர் சொன்ன வார்த்தை, அண்ணே சிம்பு நீங்க பெத்த புள்ள, நான் உங்கள் தத்துப்புள்ள என்று நெகிழ்ச்சியான சொன்னார். அந்த வார்த்தைகளை கேட்டதும் டி ராஜேந்தர் கண்கலங்கினார் என்று அந்த பதிவில் காதல் சுகுமார் கூறியிருக்கிறார்.





