நடிகர் அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி படம் இன்று முழுவதும் ரிலீஸானது. தமிழ்நாடு கேரளா கர்நாடகா மாநிலங்களில் இன்று காலை 9 மணிக்கு படம் வெளியானது. அதே போல் வெளிநாடுகளிலும் இந்த படம் ரிலீஸானது. அஜீத்குமார் திரிஷா பிரசன்னா பிரியா வாரியர் பிரபு யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
குட் பேட் அக்லி படத்தை பொருத்த வரை இது முழுக்க முழுக்க ஏகே ரசிகர்களுக்கான படம். ரசிகர்களை மட்டுமே திருப்திபடுத்தும் வகையில் கதை திரைக்கதை வசனம் என உருவான படம். ஒரு ரசிகன் தன் அபிமான நடிகரை திரையில் எப்படி பார்க்க விரும்புவாரோ அப்படி காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை மாஸ் ஆக காட்டி ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
கேங்ஸ்டராக உள்ள அஜீத்குமாரின் மனைவி திரிஷாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தையை பார்க்க வரும் அஜீத்குமாரை, உங்களை போன்ற ஒரு ரவுடி என் மகனை தொடக்கூட கூடாது என்று எச்சரிக்கிறார். மகனுக்காக தன் ரவுடித்தனத்தை கைவிட்டு திருந்தும் அஜீத்குமார், அதுவரை செய்த குற்றங்களுக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார்.
ஆனால் அதற்கு பின் தனது மகனுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்காக அவர் மீண்டும் கேங்ஸ்டராக மாறி வில்லன்களை பழிவாங்குவதுதான் இந்த படத்தின் மையக்கதை. வில்லன் நடிப்பில் அர்ஜூன்தாஸ் சென்சுரி அடித்திருக்கிறார். பல இடங்களில் அசத்தியிருக்கிறார். அதே போல் பிரபு பிரசன்னா ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களும் படத்தில் வந்து செல்கின்றனர்.
படம் முழுக்க அஜீத்குமார் நடித்த பழைய படங்களில் இருந்து பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. பழைய படங்களில் மொத்த ரெபரன்ஸ் குவியலாக இந்த படம் இருக்கிறது. மேலும் கமல் படத்தில் இருந்து இளமை இதோ இதோ பாடலும், ஒத்த ரூபா தாரேன் பாடலும் இந்த படத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன.
அஜீத்குமார் ரசிகர்களை மட்டுமே சந்தோஷப்படுத்தும் நோக்கத்தில் உருவான படம் நிச்சயமாக அவர்களுக்கு மட்டுமே ரொம்பவும் பிடிக்கும். லாஜிக் எதிர்பார்க்கும் பொதுவான ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தையே தரும். அவ்வளவு திருப்தி அளிக்காது என்றாலும் ஒருமுறை பார்க்கும் அளவுக்கு படத்தில் சுவாரசியம் நிறைய இருக்கிறது. அந்த வகையில் விடாமுயற்சி போன்ற படத்தை விட இது பலமடங்கு நல்ல படமாகவே இருக்கும்.





