தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் கலையரசன். குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு பெயர் போன இவர், தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் அதற்கான முத்திரையை பதித்து விடுவார். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார் கலையரசன்.
இதேபோல் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்திலும் கலையரசன் நடித்திருப்பார். இருப்பினும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையையும், பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்த திரைப்படம் மெட்ராஸ். அதில் அவர் ஏற்றுக் கொண்டு நடித்த அன்பு கதாபாத்திரத்தை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.
துணிச்சலான இளைஞர் கதாபாத்திரத்தில் அவர் அந்தப் படத்தில் நடித்திருப்பார். இந்த ஒரு படமே கலையரசனுக்கு மிகப்பெரிய ரீச்சை கொடுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களிலும் கலையரசன் நடித்தார். தானா சேர்ந்த கூட்டம், கபாலி, சார்பட்டா பரம்பரை என அவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தன.
அவர் கதாநாயகனாக நடித்த குதிரைவால் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும், அந்தளவு விமர்சனத்தை பெறவில்லை. அண்மையில் அவர் நடிப்பில் வாழை திரைப்படம் வெளியாகி இருந்தது. அதில் கலையரசன் நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. அதில் தான் ஏற்றுக் கொண்ட வாழைத்தோட்ட தொழிலாளி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தார் கலையரசன்.
இப்படி எந்த திரைப்படமாக இருந்தாலும் அதில் கலையரசன் நடிக்கும் கதாபாத்திரம் நின்று பேசும். அதேசமயம் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் இறப்பது போலவே காட்சி அளிக்கப்பட்டு இருக்கும். இது குறித்து சமூக வலைதளத்திலும் பலர் கிண்டல் அடிப்பார்கள். இந்த நிலையில் அது குறித்து வெளிப்படையாக கலையரசன் பேசியிருக்கிறார்.
அவர் நடிக்கும் மெட்ராஸ் காரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் இதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலையரசன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரம் சாகப் போகிறது என்றால், தன்னிச்சையாகவே எனது பெயரை எழுதி விடுகிறார்கள். இதற்காக நான் இணையதளத்தில் பயங்கரமாக கிண்டல் செய்யப்படுகிறேன். மலையாளத்தைப் பொறுத்த வரைக்கும் அங்கு பெரிய ஹீரோக்கள் முதற்கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். ஆனால் அது தமிழில் இல்லை. தற்போது நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் கதாநாயகனாகவும் நடிக்கவும் முடிவெடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.





