நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. நடிகர் கமலுக்கு 3வது முறையாக தேசிய விருதை பெற்றுத் தந்தது.
ஆனால் இந்தியன் 2 படம், கங்குவா படம் போலவே கடந்தாண்டில் வெளியான படங்களில் மிக மோசமான விமர்சனங்களில் சிக்கிய படமாக மாறியது. ஷங்கர் இயக்கியது படமா என்று ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு மிகவும் மோசமான, அதிருப்தியான படமாக இந்தியன் 2 ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டது.
அதே நேரத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்த அமரன் படம் சக்கைப் போடு போட்டது. ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இந்த படம், கடந்த ஆண்டில் தீபாவளிக்கு வெளியாகி ரூ. 325 கோடி வசூலித்தது. ரூ. 445 கோடி வசூலித்த தி கோட் படத்தை தொடர்ந்து அதிகம் வசூலித்த படமாக அமரன் இருந்தது.
இந்த சூழலில் நடிகர் கமல், 45 நாட்கள் நடக்கும் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் பங்கேற்க அமெரிக்காக சென்றுவிட்டார். அவர் அமெரிக்கா சென்று 3 மாதங்கள் கடந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதமே இறுதியில் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் அவர் அமெரிக்காவில்தான் இருக்கிறார். இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் தமிழ்நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
நடிகர் கமல் அடுத்ததாக தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்க உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் அமெரிக்காவுக்கு அவர்களை வரவழைத்த கமல், 237வது படம் குறித்து ஆலோசித்துள்ளார். மேலும் அவர்களுடன் அமெரிக்காவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்து, ஓட்டல்களில் சாப்பிட்டு ஜாலியாக அவர்களுடன் அரட்டையடித்து பொழுதை கழித்து வருகிறார் கமல்ஹாசன்.
எனினும் வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அவர் சென்னை வந்துவிடுவார் என்பதும் மட்டும் உறுதியாகி விட்டது. ஏனெனில் அவர் தயாரித்த அமரன் படத்தின் 100வது நாள் விழா நடைபெற உள்ளது. சென்னை சாய்ராம் கல்லூரியில் நடக்கும் பிப்ரவரி மாதம் நடக்கும் இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தயாரிப்பாளர் கமல் பங்கேற்று திரைக்கலைஞர்களுக்கு பரிசு கேடயங்களை வழங்க உள்ளனர்.





