நடிகர் கமல்ஹாசனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அமரன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்து இருக்கிறார். ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையைமைத்து உள்ளார்.
அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். வருகிற 31ம் தேதி தீபாவளிக்கு அமரன் படம் ரிலீஸ் ஆகிறது. பயங்கரவாதிகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாகக் கொண்டு அமரன் படம் உருவாகி உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து, ஹே மின்னலே பாடல் வெளியாகி ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. அடுத்து வருகிற 18ம் தேதி அமரன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்றும், அதே நாளில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சில தினங்களுக்கு முன் அமரன் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகை சாய் பல்லவி, முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, அமரன் படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு, குறுதிப்புனல், சத்யா ஆகிய படங்களில் வரிசையில் சொல்லிவிட முடியாது. அந்த 3 படங்களும் புனைக்கதைகள்.
ஆனால் அமரன் படம் அப்படியல்ல. இந்த படம் நமக்காக நடந்த ஒரு நிஜம். இந்த கதையை ஏன் இப்படி போகிறது என யாரும் கேட்க முடியாது. இதுதான் கதை, இதை தாங்கிக் கொள்ள முடிந்தால் தாங்கிக் கொள்ளுங்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸை முதலில் கேட்டவர் இந்து. வீரனுக்கு நிகரான வீராங்கனை வீட்டிலும் இருக்க வேண்டும்.
அதைப் பற்றியும் இந்த படத்தில் பேசியிருக்கிறோம். அந்த நிஜம் எல்லா தாய்மார்களுக்கும் புரியும். எல்லா மனிதனுக்கும் தெரியும். அதனால் இது ஒரு வித்தியாசமான கதை. இந்த கதையை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டது. அதை நாங்கள் கண்டெடுத்து விட்டோம். இப்படத்தில் எங்களின் பங்கு கடமையை செய்து விட்டோம் என்பதுதான் என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.





